அதிக நீரோட்டம் உள்ள பாக்கு நீரிணைக் கடலில், மார்ச் முதல் மே மாதம் வரை நீரோட்டம் மற்றும் அலையின் வேகம் குறைவாக இருக்கும். இந்த மாதங்களில் நீச்சல் வீரர்கள், தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை (30 கி.மீ.) நீந்திச் சாதனை படைப்பது வழக்கம்.
இந்நிலையில், தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பரின் மகன் ஜெய்ஜஸ்வந்த் (10 வயது ) என்பவர் இந்த பகுதியில் நீந்திச் சாதனையை படைக்கவுள்ளார். இவர், தேனியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறார். சிறுவயது முதல் நீச்சல் பயின்ற இவருக்கு, நீச்சலில் சாதிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
இதற்காக, பயிற்சியாளர் விஜயகுமார் ஆலோசனையில் பலநீச்சல் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றுள்ளார். தற்போது, இலங்கையின் தலைமமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்கு நீரிணைக் கடலில் நீந்த முடிவு செய்தார். இதற்காக இன்று (27ம்திகதி), ராமேஸ்வரத்தில் இருந்து மாணவர் ஜெய்ஜஸ்வந்த், அவருடைய தந்தை மற்றும் பயிற்சியாளர், வழிகாட்டும் குழுக்கள் 15 பேருடன் விசைப்படகில் புறப்பட்டு இலங்கை செல்கிறார்.
நாளை (28ம் திகதி) அதிகாலை 2 முதல் 3 மணிக்குள், மாணவர் ஜெய்ஜஸ்வந்த் கடலில் குதித்து நீந்தி, மாலை 4 மணிக்குள் தனுஷ்கோடி அரிச்சல்முனை வந்தடைவார். 1994ம் ஆண்டு, குற்றாலீஸ்வரன் என்பவர் தனது 12வது வயதில் இக்கடல் பகுதியை 16 மணி நேரத்தில் நீந்தி கடந்தார். ஆனால் 10 வயது மாணவன் ஜெய்ஜஸ்வந்த், 15 மணி நேரத்திற்குள் நீந்திவந்து அந்த சாதனையை முறியடிக்கத் திட்டமிட்டுள்ளதாக பயிற்சியாளர் தெரிவித்தார்.