அத்துடன் இவ்வாறானதொரு நிலை ஏற்படுமானால், அது முள்ளிவாய்க்காலில் முடியாமல் மாறாக இலங்கை இரண்டாக உடைவதில் சென்று முடியும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கலப்பு நீதிமன்ற பொறிமுறையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டால் கறுப்பு யூலை உருவாகும் என டிலான் பெரேரா கூறிய கருத்து குறித்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேற்படி விடயம் தொடா்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து சிறீகாந்தா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், “நேற்று கொழும்பில் ஊடகவியலாளா்களை சந்தித்த டிலான் பெரேரா தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலப்பு நீதிமன்ற பொறிமுறையை கேட்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலப்பு நீதிமன்ற பொறிமுறையை கேட்டால் மீண்டும் கறுப்பு யூலை ஒன்று உரு வாகும் என கூறுகிறார்.
அதன் அர்த்தம் ஐ.நா.வில் நாங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்வோம், இலங்கையில் என்ன வேண்டுமானாலும் செய்வோம் நீங்கள் ஒன்றும் கூறமுடியாது என்பது தான். கறுப்பு யூலை என்பது 1983ஆம் ஆண்டு தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவெறிச் செயல்.
அதுவே இந்த நாட்டில் 26 வருடங்கள் நீடித்த மிக மோசமான யுத்தத்திற்கு வழிகோலியது. அந்த யுத்தத்தில் 2 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். தமிழ், சிங்களத் தரப்பில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உயிரிழந்தாார்கள். பலர் அங்கவீனமாக்கப்பட்டார்கள். பலா் காணாமல்போனார்கள்.
இவற்றுக்கெல்லாம் மூல காரணம் கறுப்பு யூலை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். மேலும் டிலான் பெரேராவின் கருத்து சந்தி சண்டியன்களின் கருத்துப்போல் இருக்கின்றது. உண்மையில் டிலான் பெரேரா இலங்கையில் உள்ள மக்களை நேசித்திருந்தால் கறுப்பு யூலை என்ற வார்த்தையை உச்சரிப்பதற்கே அவருக்கு வாய் கூசியிருக்கும்.
ஆனாலும் எந்த கூச்சமும் இல்லாமல் அவர் அந்த கருத்தைக் கூறியுள்ளார். அவருக்கு நாங்கள் கூற விரும்புவது, கறுப்பு ஜூலை அல்ல. அதனைவிட மோசமான சம்பவங்களையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தயார்.
தமிழ் மக்களின் நீதிக்கான எதிர்பார்ப்பின் முன்னால் கறுப்பு ஜூலை என்பது ஒன்றுமே இல்லை. கறுப்பு ஜூலையைக் காட்டி தமிழர்களை அச்சுறுத்தும் எண்ணம் இருந்தால் அது வெறும் கனவு மட்டுமே என்பதை டிலான் பெரேரா நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.
மேலும் மீண்டும் ஒரு கறுப்பு யூலை வந்தால், அது முள்ளிவாய்க்காலில் முடியாது. அது இலங்கை இரண்டாக உடைவதில் தான் முடியும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.