(குகதர்சன்)
நாட்டில் தற்போது மழை இல்லாததற்கு வில்பத்து காட்டினை நான் அழித்தமையே காரணம் என்று சில இனவாதிகள் கூறுகின்றது கவலைக்குறிய விடயம் என கைத்தொழில் வணிக, நீண்ட கால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற, கூட்டுறவு திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலக பிரிவில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமத்தில் அமையப்பெற்றுள்ள மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலயத்தின் மிக நீண்ட நாள்தேவையாக இருந்து வந்த வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-
இன்று நாட்டின் குறிப்பிட்ட சிலர் இனவாதத்தை தூக்கி பிடிக்கின்றனர். தற்போது நாட்டில் வெப்பம் அதிகரித்தமைக்கு காரணம் வில்பத்து காட்டினை நான் அழித்தமையே என கூறுகின்றனர். ஆனால் இந்த இடத்தில் 1990ம் ஆண்டுக்கு முன் எமது முஸ்லிம் மக்கள் வாழ்ந்தனர். அவர்களது இடத்தில் மீள குடியேற்றம் இடம்பெறும் போதுதான் காடுகளை அழிக்கின்றோம் என்று எனக்கெதிரான பொய் பிரச்சாரங்களை சொல்லி வருகின்றனர்.
கொழும்பு பல்கலைக் கழக மாணவர்கள் எனக்கு எதிராக போராட்டம் நடாத்தினார்கள். அதிபர் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணித்து இருந்த புகைப்படத்திற்கு எனது முகத்தை மாற்றி வைத்திருந்தார்கள், எனது மற்றுமொரு புகைப்படத்தை இறந்த உடலில் வைத்து இரண்டு கோடி மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று வைத்துள்ளனர்.
எதிர்காலத்தில் பல்கலைக் கழகத்தில் பட்டதாரிகளாக, உயர் பதவி வகிப்பவராக வரவுள்ள எதிர்கால சந்ததியினர் மத்தியில் நஞ்சை ஊட்டுகின்ற அநாகரீகமான கலாசாரம் இந்த நாட்டில் யுத்தத்திற்கு பின்னர் திணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நாங்கள் முகங்கொடுக்க, அச்சப்பட வேண்டிய தேவை கிடையாது. ஒரு பொய்யை வைத்துக் கொண்டு நமக்கு எதிராக கட்டவிழ்த்து நாங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்பார்களாக இருந்தால் அதனை நாங்கள் செய்வோமாக இருந்தால் இறைவனிடத்தில் பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறான பிரச்சனைகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும், அதன் தலைமையும் முகங்கொடுத்து வருகின்றது. நாங்கள் எங்கள் பிள்ளைகளை நல்ல மார்க்க கல்வியோடு, நல்ல ஒழுக்கத்தோடு வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.
நமக்கு முன்னாள் இருக்கின்ற சவால்கள், நாங்கள் செய்யாத தவறு செய்ததாக திணிக்கின்றார்கள். எங்களை அநியாயமாக வம்புக்கு இழுக்கின்றார்கள். எங்கள் மார்கம், சொத்துக்கள், எங்கள் மீதும், எதிர்காலத்தின் மீதும் கைது வைத்து எங்களை சீண்டுகின்ற அநாகரீகமான செயல் தொடர்ந்து திட்டமிட்டு நடந்து கொண்டிருக்கின்றது.
இதற்கு பின்னால் சில சக்திகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனை தடுத்து சவால்களுக்கு முகம் கொடுக்கின்ற நல்ல கலாசாரம், ஒழுக்கமுள்ள, சக்தியுள்ள, நேர்மையுள்ள, அறிவுள்ள, ஆற்றலுள்ள சமுதாயத்தை வளர்தெடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு நமக்கு இருக்கின்றது.
இந்த விடயத்தில் எமது கட்சி அண்மைக் காலமாக திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. எமது பிள்ளைகளை கவனமாக வளர்த்தெடுக்க வேண்டிய காலத்தில் நாங்கள் இருக்கின்றோம். உலகக் கல்வி போல மார்க்க கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும். அதேபோன்று ஒழுக்கத்திலும் எமது சமூகத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்றார்.
பாடசாலை அதிபர் எம்.ஏ.சி.எம்.ஜிப்ரிகரீம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக விவசாய நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் துறைமுக மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கட்சியின் பொதுச் செயலாளர் சுபைதீன், பிரதேச சபை தவிசாளர் அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்களான அமீர், ஜௌபர்,ஜெஸ்மின்,பாயிஸா , சட்டத்தரணி ராசிக், இணைப்பாளர் ஹமீட், பீர்முகம்மது காஸிமி, ஹபீப் மௌலவி, உதவி கல்விப் பணிப்பாளர் அஜ்மீர், கல்விப் பணிப்பாளர் கலீல் றகுமான், கேணிநகர் அதிபர் மீரா முகைதீன் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.