தே.மு.தி.க. கூட்டணியில் இழுபறி நீடித்து வரும் நிலையில் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கூட்டணி தொடர்பான தனது முடிவை தே.மு.தி.க. இதுவரை அறிவிக்காத நிலையில் ஆலோசனை நடைபெற்று வந்தது. ஆலோசனையின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ், கூட்டணி குறித்தும், தொகுதி எண்ணிக்கை பற்றியும், எந்தந்த தொகுதி என்பது பற்றியும் பியூஸ் கோயிலுடன் பேசியதாக கூறினார்.
இதனையடுத்து பிரதமர் மோடியின் பொதுக்கூட்டம் நடந்து வருவதால், தொடர்ந்து பேசுவார்த்தை நடத்த போதிய நேரம் கிடைக்கவில்லை என கூறினார்.
எனவே அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என்றும், இது குறித்து ஓரிரு நாளில் முடிவு அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பாகவும் ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. அதற்கு பதிலளித்த அவர், கூட்டணி தொடர்பாக துரைமுருகனிடம் தொலைபேசியில் அழைத்து பேசியது உண்மைதான் என்று கூறியுள்ளார்.
பா.ஜ.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைப்பது தொடர்பாக விஜகாந்த் முடிவு செய்த பின்னர், பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அந்த நேரத்தில் தி.மு.க. சார்பில் தங்களுக்கு அழைப்பு வந்தது உண்மைதான் என்றும், அவர் துரைமுருகனிடம் பேசியதும் உண்மைதான் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது தனிப்பட்ட விஷயம் என்றும் தங்கள் கட்சியின் பலம் என்னவோ அதற்கான தொகுதிகளை நாங்கள் கேட்கிறோம் என்றும் சுதீஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்றும் ஓரிரு நாட்களில் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.