இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி விசாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலைச் சின்ன விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் வி.கே.சசிகலா ஆகியோர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் கடந்த 5ஆம் திகதி மேன்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தேர்தல் ஆணையம் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கியது சரியானது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 28ஆம் திகதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்.
மேலும், இந்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடையும் வரையிலும், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும். மக்களவைத் தேர்தல் உள்ளிட்டவற்றில் குக்கர் சின்னத்தையும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பெயரையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.