இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி.டெப்ளிட்ஸ் (ALAINA B. TEPLITZ) மற்றும் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் உடனான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.
இச்சந்திப்பில், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மக்களின் நிலைப்பாடுகள் குறித்து அமெரிக்கத் தூதுவர் முதல்வரிடம் கேட்டறிந்துகொண்டார்.
இதன்போது முதல்வர் தெரிவிக்கையில், “மக்கள் பெரும் அச்சத்தோடு இருக்கின்றனர். இலங்கை மீதான ஐ.நா வின் 30.1 தீர்மானம் மற்றும் 34.1 தீரமானங்கள் ஊடாக மக்கள் எதிர்பார்த்திருந்த நீண்டகால அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு குறைந்துவிட்டது.
கடந்த ஒக்டோபரில் நடைபெற்ற அரசியல் புரட்சியுடன் நாடாளுமன்றில் 2/3 பெரும்பான்மை இல்லாது போனதன் பின்னர் நம்பிக்கை இழக்கப்பட்டுவிட்டது.
மக்கள் 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏகோபித்த உரிமையைத் தந்தார்கள். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பொறுப்பிலிருந்து விலகிச் செல்லமுடியாது” என்று தெரிவித்தார்.
இதையடுத்து அமெரிக்கத் தூதுவர் குறிப்பிடுகையில், “புதிய அரசியலமைப்பு முயற்சிகள் குறித்து அமெரிக்காவின் கண்காணிப்பு தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், அதற்கான ஒத்துழைப்புக்கள் தொடர்ந்தும் இருக்கும் என்ற கருத்தினையும் பதிவு செய்தார்.
அத்துடன், ஜெனீவாவில் இம்முறை இலங்கைக்கு வழங்கப்படுகின்ற கால அவகாசத்தினால் மாத்திரமே இலங்கையின் நிகழ்ச்சி நிரலை தொடர்ந்துகொண்டு இலங்கையின் நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணிக்க முடியும் என்றும் இல்
லாவிட்டால் ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான நிகழ்ச்சி நிரல் இல்லாது போய்விடும் என்ற கருத்தையும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சந்திப்பில் தூதுவருடன் அமெரிக்க தூதுவராலயத்தின் பொது விவகார அலுவலர் டேவிட் ஜே மெக்குரி (DAVID J MCGUIRE ), அமெரிக்க தூதுவராலயத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் அந்தோனி எப். ரென்சுலி ( ANTHONY F RENZULLI ), மற்றும் யாழ்.மாநகர ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.