இடைநிலை போதைப் பொருள் கடத்தல் தரகர் ஒருவரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கை ஒன்றின் போது குறித்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த 28ஆம் திகதி, அப்பர் ஓட்டாவா அவனியு மற்றும் பெனல் அவனியு பகுதியில் இரகசியக் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதிகாரிகள், குறித்த அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் 34 வயது ஆண் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக பொதிகளை கார் ஒன்றினுள் ஏற்றிக்கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர்.
பின்னர், குறித்த நபரை கைது செய்து, அவர் வாகனத்தினுள் ஏற்றிய பொருட்களை ஆராய்ந்தபோது, அதற்குள் கொக்கெய்ன், ஹெரோயின் உள்ளிட்ட பலவகை போதைப் பொருட்கள் மற்றும் 3000க்கும் அதிகமான போதை மாத்திரைகள் காணப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தினுள் உள்ள வீடு ஒன்றினுள் தேடுதல் நடாத்தியபோது, அங்கே பெருமளவு போதைப் பொருட்களும், அவற்றை மாத்திரைகளாக அழுத்தியெடுக்கும் இயந்திரங்களும் காணப்பட்டதாகவும், இந்த நடவடிக்கையின்போது மொத்தம் ஏழு கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்ப்டட நபர் ஹமில்ட்டனைச் சேர்ந்த 34 வயதான சோம்னி சென் எனவும், அவர் மீது போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள விசாரணை அதிகாரிகள், குறித்த இந்த நபர் தொடர்பில், அல்லது இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.