நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பயணம் மேற்கொண்டார். அங்கு சுரட்கர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “நாட்டில் இருந்து வறுமையை விரட்டியடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வறுமையை விரட்டியடிக்க சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்துவோம். இதன்மூலம் நாட்டில் எந்த ஒரு குடிமகனும் வறுமை நிலையில் இருக்கமாட்டார்கள். எந்த நாடும் இதுபோன்ற முயற்சியை எடுக்கவில்லை.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பணக்காரர்களுக்கு பணத்தை அள்ளி வழங்குகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு மட்டுமே பணத்தை கொடுக்கும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 14 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசித்து வரும் மக்களின் எண்ணிக்கை 25 கோடியாக உயர்ந்துள்ளது. இது பெரும் அவமானமாக உள்ளது” என்று தெரிவித்தார்.