50 ஆண்டுகளாக 600க்கும் அதிகமான திரைப்படங்கள், ஏராளமான நாடகங்களில் நடித்த கோபு, தனது 86ஆவது வயதில் சென்னையில் நேற்று (புதன்கிழமை) காலமானார்.
இவர், திருச்சியில் பிறந்து இளவயதிலேயே குடும்பத்துடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார். இவரது இயற்பெயர் கோபாலரத்தினம்.
கடந்த 1955இல் தனது நண்பரும், நகைச்சுவை நடிகருமான நாகேஷ் நாடகக் குழுவின் நாடகங்களில் நடித்தார். 1959இல் நெஞ்சே நீ வாழ்க எனும் மேடை நாடகத்தில், டைப்பிஸ்ட் கோபு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், அவருக்கு இந்த அடைபெயர் நிலைத்து நின்றது. அதேநேரம், 1965இல் கே.பாலசந்தர் இயக்கிய நாணல் திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார்.
தொடர்ந்து அதே கண்கள், உயர்ந்த மனிதன், எங்க மாமா, காசேதான் கடவுளடா, பரீட்சைக்கு நேரமாச்சு, மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
2002இல் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தனது கடைசி காலத்தில் மனைவியுடன் சென்னையில் வாடகை வீடு ஒன்றில் வறுமை நிலையில் வசித்து வந்தார். உடல்நலக் குறைவால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என மூன்று தலைமுறை நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.
அவரது மறைவுக்கு நாடக நடிகர்களும், திரை பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.