“நான் பாவம் செய்தேன்| இருப்பினும் எனக்கு என்ன நேர்ந்தது? எனக் கூறாதே. ஆண்டவர் பொறுமை உள்ளவர்.
பாவத்திற்கு மேல் பாவம் செய்யும் அளவுக்கு பாவ மன்னிப்புப் பற்றி அச்சம் இல்லாமல் இராதே| ஆண்டவரின் பரிவு எல்லையற்றது.
எண்ணற்ற என் பாவங்களை அவர் மன்னித்து விடுவார் என உரைக்காதே. அவரிடம் இரக்கமும், சினமும் உள்ளன| அவரது சீற்றம் பாவிகளைத் தாக்கும்.”
பலரும் நாம் நம் பாவ வாழ்வின் விளைவால் மனச்சாட்;சியை சாத்தானிடம் அடவு வைத்து விட்டு, அது மரத்துப்போன நிலையில், தொடர்ந்தும் பாவங்கள் பண்ணுவதோடு கடவுளை ஏளனமாக எண்ணுகின்ற நிலைக்கும் சென்று விடுகின்றோம். கடவுள் என்ன செய்துவிட்டார்? எனக்கென்ன தண்டனையைத் தந்தார் அவர்? என்று இறுமாப்புக் கொள்ளுகின்றோம். மதத் தலைவர்கள் கூட தாம் இறைவனுக்கு அடுத்துள்ளவர்கள் என்பதால் என்ன பாவமும் பண்ணலாம் என்று அடாவடியாக நடந்து கொள்ளுகின்றார்கள். இறைவன் ஏராளமாக வாய்ப்புக்களைக் கொடுக்கிறார்| பாவம் செய்யவல்ல, பாவத்திலிருந்து திருந்தவும், மனம் வருந்தி மன்னிப்புப் பெறவும்! அதை இறைவனுடைய பலயீனமாக எடுத்துக் கொண்டு கடவுளுக்கு அடுத்திருப்போர் என்ற மமதையில் குற்றம் பண்ணியவர்கள் இன்று சிறையிலடைக்கப்படுகின்றனர். தவறுகளில் மாட்டிக் கொண்டால், ஆளுக்கு ஆள் தூதனுப்பி மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள முனைகின்றனர். மனம் திருந்தியல்ல, மானம் போய் விடுமென்று மூடி மறைக்கவே. தொடர்ந்தும் பாவத்தைப் பண்ண அவர்கள் தயங்குவதில்லை. சாதாரண மனிதர்களிடம் இருக்கும் மன உறுத்தல் கூட அவர்களிடம் இருக்குமா என்பது சந்தேகமே. கடவுள் ஏனோ அன்றறுப்பதில்லை. அவர் நின்றுதான், அதாவது பொறுமையோடு இருந்துதான் சாதிப்பவர்.
பன்னிரெண்டாம் நிலை
உயிரைத் தருகின்ற இயேசு
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம்.
அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
மனிதனால் கொடுக்கப்படக்கூடிய அதியுயர் காணிக்கை உயிராகத்தான் இருக்க முடியும்! மனித மீட்புக்காக இயேசு கொடுக்கும் அதியுயர் காணிக்கை அவரது உயிராக அமைகிறது.
மனித இனத்தின் பாவங்களையெல்லாம் .. .. தம் தோளிலே ஏற்று,.. .. கடூரமான பாதை கடந்து தூக்கிச் சென்று .. .. சிலுவையில் அவற்றைத் தம்மோடு பிணைக்கப்பண்ணி.. .. அவற்றையெல்லாம் மரணிக்கப்பண்ணுகிறார் இயேசு!
பாவத்தின் விலை இயேசுவின் உயிர்.. ..! இந்த விலை நியாயமானதுதானா? .. .. நமது பாவத்திற்கு விலை இயேசுவின் உயிரா.. ..? இயேசுவின் உயிருக்கும் ஒரு விலையா.. .. ? இது முறையா.. ..?
ஒருத்தர் தவறு செய்ய இன்னுமொருத்தர் விலை கொடுப்பதென்பது எந்த வகையிலும் தர்மம் அல்ல! .. .. நீ விதைக்க அதை அடுத்தவன் அறுத்துக் கொண்டு போவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.. ..! ஆனால் பாவத்தை விதைத்துக் கொண்டு நீ திரிய.. .. இயேசு அதன் கனியை .. ..விளைவை அறுவடை செய்கிறார்... .. விடுதலை வாழ்வை உனக்கு உயில் எழுதி வைத்துவிட்டு .. ..தன் உயிரைத் தருகிறார்.. .. உனக்கு அருள் உயிரைத் தருகிறார்.
உலகிற்காக உயிர் தந்த இயேசுவிடம் சொல்லுவோம்:-
“ இரத்தத்தால் விடுதலைக் கவி பாடி.. .. மரணத்தால் மீட்பென்னும் உயில் எழுதி .. ..தலைமுறைதோறும் எம்மை உம் அருட் சொத்தில் பங்கு பெறப் பண்ணிய இயேசுவே.. .. நான் செய்யும் தவறுகளின் பொறுப்பினை நான் ஏற்க வேண்டும்.. .. பாவத்தை விட்டு நான் விரண்டோட வேண்டும்.. .. அதற்கான நெஞ்சுறுதி எனில் வரவேண்டும்.. .. வளரவேண்டும்.”
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவன.