LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, March 17, 2019

ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா?


தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ கூட்டமைப்பு ஜெனீவாவில் கால அவகாசத்தை ஏற்றுக் கொள்ளும் என்றே தெரிகிறது. அதற்கு அவர்கள் வழமை போல் ஓர் அப்புக்காத்து விளக்கம் தருகிறார்கள். அதாவது அது கால அவகாசம் அல்ல. இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிப்பதற்கான ஒரு கால நீட்சியே என்று. அப்படியென்றால் கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கப்பட்ட கால அவகாசமானது ஐ.நா அரசாங்கத்தை கண்காணிப்பதற்கான அல்லது பின்தொடர்வதற்கான ஒரு கால அட்டவணையைக் கொண்டிருக்கவில்லையா? அல்லது கடந்த நான்கு ஆண்டுகால ஏமாற்றங்களின் விளைவாக இம் முறைதான் அவ்வாறு கண்காணிப்பது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறதா? ஆனால் கடந்த முறை கால அவகாசம் வழங்கப்பட்ட போது அரசாங்கத்தைக் கண்கணிப்பதற்குரிய ஒரு கால அட்டவணை பற்றி கூட்டமைப்பினர் பிரஸ்தாபித்திருந்தனர் என்பதனை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும். அப்படியென்றால் ஒரு கால அட்டவணை குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் ஏன் ஐ.நா வை வற்புறுத்தவில்லை?

தமிழ் மக்களின் பெரும்பாலானவர்கள் கேட்டது இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை. ஆனால் ஐ.நா வும் உலக சமூகமும் வழங்கியதோ நிலைமாறு கால நீதியை. இவ்வாறு தானே முன்மொழிந்த நிலைமாறு கால நீதியை இலங்கைத் தீவில் எவ்வாறு ஸ்தாபிப்பது என்பது தொடர்பில் ஐ.நா விடம் இலங்கைத் தீவின் கள யதார்த்தத்துக்குரிய ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்ததா?


இல்லை என்று கருதத்தக்க விதத்திலேயே கடந்த நான்காண்டுகால அனுபவம் அமைந்திருக்கிறது. ஐ.நாவின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானத்தை இலங்கைத்தீவில் அரசாங்கம் அமுல்ப்படுத்திய விதம் அதை ஐ.நா கண்காணித்த விதம் போன்றவை தொடர்பில் பின்வரும் கேள்விகள் உண்டு.
முதலாவது கேள்வி – நிலைமாறு கால நீதியை ஸ்தாபிப்பது என்று சொன்னால் அதை முன்மொழிந்த மனித உரிமைக் பேரவையானது அதன் அலுவலகமொன்றை இலங்கையில் அமைத்திருக்க வேண்டும். மகிந்த அதற்குச் சம்மதிக்க மாட்டார். ஆனால் ரணில் ஏன் அதைச் செய்யவில்லை? அப்படியோர் அலுவலகம் இருந்தால்தான் இலங்கைத் தீவின் கள யதார்த்தத்திற்குரிய நடைமுறைச் சாத்தியமான நீண்ட கால நோக்கிலான ஒரு வேலைத்திட்டத்தை வகுத்திருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட ஓர் அலுவலகமின்றியே கடந்த நான்கு ஆண்டுகளாக ஐ.நா அரசாங்கத்தைப் பின் தொடர்ந்து வருகிறதா? இது முதலாவது
இரண்டாவது கேள்வி – அது கால அவகாசமல்ல கண்காணிப்புக்குரிய ஒரு கால அட்டவணை என்று சொன்னால் அதற்கென்று ஒரு கண்காணிப்புப் பொறிமுறை உருவாக்கப்பட்டதா? அப்படிப்பட்ட கட்டமைப்புக்கள் எவையுமின்றி அரசாங்கத்தை அப்படிக் கண்காணிப்பது? சாதாரணமாக எமது பாடசாலைகளில் குறிப்பிட்ட ஒரு பரீட்சை இலக்கை முன்வைத்து ஒரு பாடத்திட்டத்தை வகுக்கும் போது அங்கே ஒரு காலத்திட்டம் இருக்கும். அக்காலத்திட்டத்தில் என்னென்ன பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிடப்படும். ஆனால் நிலை மாறு கால நீதியை பொறுத்தவரை அப்படிப்பட்ட காலத்திட்டமோ கண்காணிப்புப் பொறிமுறையோ ஏன் கடந்த நான்கு ஆண்டுகளாக உருவாக்கப்பட்டிருக்கவில்லை? இது இரண்டாவது.
மூன்றாவது கேள்வி – மேற்கண்ட கேள்விகளுக்கு ஐ.நா ஒரு பதிலைக் கூறக்கூடும். அதாவது ஐ.நாவின் சிறப்புத் தூதுவர்கள் இலங்கைக்குள் தொடர்ச்சியாக வந்து போனதையும் நான்கு ஆண்டுகளுக்குள் வாய்மூல அறிக்கை இடைக்கால அறிக்கை போன்றவற்றை ஐ.நாவில் சமர்ப்பிப்பதற்குத் தேவையான விதங்களில் அரசாங்கம் ஐ.நாவோடு இடையூடாடியதையும் அவர்கள் எடுத்துக்காட்டக்கூடும். கடந்த கிழமை பிரித்தானியாவால் வெளியிடப்பட்ட ஐ.நா தீர்மானத்திற்கான முதல் வரைபிலும் கடந்த எட்டாந்திகதி மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலும் அரசாங்கம் காட்டியிருக்கும் முன்னேற்றங்கள் என்று வர்ணிக்கப்படுவது மேற்படி சிறப்புத் தூதுவர்கள் தீவுக்குள் சுதந்திரமாகச் செயற்பட்டு தகவல்களைத் திரட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள் என்ற விடயமாகும்.
மகிந்தவின் காலத்தில் ஐ.நா அலுவலர்கள் தூதுவர்கள் இவ்வாறு வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு வந்தவர்களும் புலனாய்வாளர்களால் பின்தொடரப்பட்டார்கள். நவிப்பிள்ளையம்மையாருக்கு மேர்வின் டி சில்வா ஒரு கல்யாணத்தைக் கட்டிக்கொடுக்கப் போவதாகக் கூறினார். எனவே மகிந்தவின் காலத்தோடு ஒப்பிடுகையில் இது ஒரு முன்னேற்றம் தான். ஆனால் இங்கு இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்ட வேண்டும். ஐ.நாவின் உறுப்பு நாடு என்ற வகையில் ஐ.நா அலுவலர்களையும், சிறப்புத்தூதுவர்களையும் நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டிய ஒரு கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு உண்டு. அந்த அனைத்துலக உடன்படிக்கையை மகிந்த மதிக்கவில்லை. ரணில் – மைத்திரிக் கூட்டரசாங்கம் மதித்திருக்கிறது. இது ஒரு உலக வழமை. இது ஒரு முன்னேற்றமாகக் காட்டப்படுகிறதா? இது முதலாவது விடயம்.
இரண்டாவது விடயம் மேற்படி சிறப்புத் தூதுவர்களின் அறிக்கைகளில் காணப்பட்ட விமர்சனப்பண்பும் கூர்மையான வார்த்தைப் பிரயோகமும் ஐ.நாவின் தீர்மானங்களில் ஏன் தவிர்க்கப்பட்டு வருகின்றன? சிறப்புத் தூதுவர் எனப்படுவோர் குறிப்பிட்ட விவகாரத்தில் நிபுணத்துவ அறிவுடையவர்கள். ஒப்பிட்டளவில் தொழில்சார் ஒழுக்கங்களினூடாக கள நிலவரத்தை இவர்கள் வெளிப்படுத்துவர். உதாரணமாக பென் எமேர்ஸன் என்ற சிறப்புத் தூதுவர் இலங்கைத் தீவின் சட்டமா அதிபரைக் குறித்துத் தனது அறிக்கையில் ஒரு பந்தியில் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அது மட்டுமல்ல அப்போதிருந்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவோடு நடந்த உரையாடலில் எமேர்ஸன் சுட்டிக் காட்டிய விடயங்களை ஏற்றுக் கொள்ள மறுத்த விஜயதாஸ உரையாடலை இடையிலேயே முறித்துக் கொண்டு எழுந்து சென்று விட்டார். பென் எமேர்ஸன் போன்ற சிறப்புத் தூதுவர்களின் அறிக்கைகளில் காணப்பட்ட விமர்சனப் பண்பு ஐ.நா தீர்மானங்களில் இருப்பதில்லை.
அதுமட்டுமல்ல கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையர்களின் அறிக்கைகளிலும் அரசாங்கத்தை விமர்சிக்கும் பண்பு அதிகரித்து வருகிறது. கடந்த 8ந் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையிலும் அரசாங்கத்திற்கு நெருக்கடியைக் கொடுக்கும் கருத்துக்களும், பரிந்துரைகளும் உண்டு. மனித உரிமை ஆணையரின் அலுவலகம் ஒன்றை இலங்கையில் ஸ்தாபிப்பது ஒரு கண்காணிப்புப் பொறிமுறையை ஏற்படுத்துவது. ரணில் – மைத்திரி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கத்திற்கான மக்கள் கருத்தறியும் தேசியச் செயலணியின் பரிந்துரைகளை அமுல்ப்படுத்துமாறு கேட்டிருப்பவை போன்றன அரசாங்கத்திற்கு நெருக்கடியானவை. குறிப்பாக நல்லிணக்கத்திற்கான தேசியச் செயலணியின் பரிந்துரைகளில் ஒன்று இலங்கை அரச படைகளுக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு கூறுகின்றது. இவை மட்டுமல்ல. மேற்படி அறிக்கையில் நிலைமாறு கால நீதிப் பொறிமுறைக்குள் குற்ற விசாரணை என்ற அம்சத்துள் இலங்கை அரசாங்கம் முன்னேற்றத்தைக் காட்டவில்லை என்றும் மனித உரிமைகள் ஆணையர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆனால் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் மனித உரிமைகள் ஆணையாளர்களின் அறிக்கைகளில் காணப்படும் கூர்மையான விமர்சனம் ஐ.நாத் தீர்மானங்களில் காணப்படுவதில்லை என்பதுதான். அதாவது சிறப்புத் தூதுவர்கள் மற்றும் ஐ.நா மனித உரிமையாளர் ஆணையாளர் போன்றோரின் அறிக்கைகளுக்கும் ஐ.நாவின் உத்தியோகபூர்வ தீர்மானங்களுக்குமிடையே பாரதூரமான இடைவெளி உண்டு. இது பொறுப்புக் கூறலில் ஐ.நா தனது பொறுப்பைத் தட்டிக்கழிப்பதைக் காட்டும் ஓர் இடைவெளியா?


மேற்கண்டவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் போது ஒரு விடயம் மிகத் தெளிவாகத் தெரியவரும். கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் இலங்கை அரசாங்கம் தான் ஏற்றுக்கொண்ட பொறுப்புக்களை நிறைவேற்றுகிறதா? இல்லையா? என்பதனை கண்காணிப்பதற்குரிய இலங்கைத் தீவின் களயதார்த்தத்திற்கேயான ஒரு சிறப்புப் பொறிமுறையும் அப்பொறிமுறைக்கு உட்பட்ட கால அட்டவணையும் ஐ.நாவிடம் இருக்கவில்லை என்பதுதான். இது பான்கி கி மூன் இலங்கை விவகாரம் தொடர்பில் கூறியது போல ஐ.நாவின் கட்டமைப்புக்களில் காணப்படும் குறைபாடுகளால் ஏற்பட்டதா? அல்லது ஐ.நா அரசியலின் விளைவா?
ஐ.நாவின் கட்டமைப்புக்களில் குறைபாடு உண்டு. அது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. ஆனால் இலங்கைத்தீவின் விவகாரத்தில் கடந்த நான்காண்டுகளாக வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் இம்முறை வழங்கப்படக்கூடிய கால அவகாசத்திற்கும் பின்னால் ஐ.நாவின் அரசியல் இருக்கிறது. 2012 தொடக்கம் 2015 வரையிலும் ராஜபக்ஷ அரசாங்கத்தைக் கையாண்ட விதத்திலும் ஐ.நாவின் அரசியல் இருக்கிறது. கடந்த ஒக்ரோபர் மாத ஆட்சிக் குழப்பத்தின் பின் தற்பொழுது வெளிவந்திருக்கும் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்குள்ளும் அந்த அரசியல் தொனிக்கிறது. பிரித்தானியாவின் தீர்மான முதல் வரைபு அந்த அரசியலைத்தான் அப்படியே பிரதிபலிக்கிறது. இலங்கைத்தீவின் விவகாரத்தை மனித உரிமைகள் பேரவைக்குள் மட்டுப்படுத்தி வைத்திருப்பதிலும் ஐ.நாவின் அரசியல் இருக்கிறது.
இலங்கைத்தீவைப் பின் தொடர்வதில் அல்லது கண்காணிப்பதில் ஐ.நாவிடம் காணப்படும் குறைபாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு உரியவை என்று ஓர் கருத்து உண்டு. அதில் ஓரளவிற்கு உண்மையும் உண்டு. மனித உரிமைகள் பேரவையானது ஒரு நாட்டின் மீது நிர்ப்பந்தத்தை பிரயோகிக்கும் அமைப்பு இல்லை. ஒரு நாடு விரும்பி ஏற்காவிட்டால் அந்த நாட்டிற்குள் இறங்கிச் செயற்பட அல்லது அந்த நாட்டைக் கண்காணிக்க அல்லது பின்தொடர மனித உரிமைகள் பேரவையால் முடியாது. அப்படிச் செய்யும் அதிகாரம் ஐ.நாவின் பொதுச்சபைக்கும் பாதுகாப்புச் சபைக்கும்தான் உண்டு. ஆனால் இலங்கை விவகாரத்தை மனித உரிமைகள் பேரவைக்குள்ளேயே வைத்திருப்பதன் மூலம் அது ஒரு மனித உரிமைகள் விவகாரமாகச் சுருக்கப்பட்டு அடுத்தடுத்த அரங்குகளுக்கு அதை எடுத்துச் செல்லாமல் முடக்கப்படுகிறது. இதில் மேற்கு நாடுகளின் நலன்களும் இந்தியாவின் நலன்களும் சம்பந்தப்படுகின்றன. இது முழுக்க முழுக்க ஓர் அரசியல் தீர்மானத்தான்.
2009ல் கிளிநொச்சியிலிருந்து ஐ.நா வெளியேறியமை இறுதிக்கட்டப் போரில் பொது மக்களைப் பாதுகாக்கும் விதத்தில் இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்றாந்தரப்பின் கண்காணிப்புடன் கூடிய ஒரு பாதுகாப்பு வலயத்தை உருவாக்கத் தவறியமை உட்பட அனைத்துமே அரசியல் தீர்மானங்கள்தான்.
எனவே அதை அதற்குரிய அரசியற் களத்தில் தான் தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டும். அதை வெறுமனே மனித உரிமைகள் விவகாரமாக மட்டும் அணுகக்கூடாது. ஜெனீவா அக்களங்களில் ஒன்று மட்டும்தான். அதற்குமப்பால் ஜெனீவாவிற்கும் வெளியே ஏனைய களங்களையும் தமிழ் மக்கள் கையாள வேண்டும். ஐ.நாவின் பொதுச்சபை, பாதுகாப்புச்சபை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் போன்ற அரங்குகளை நோக்கி தமிழ் மக்களின் விவகாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு ஜெனீவாவிற்கு வெளியே வேறு தலைநகரங்களில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

அதற்குச் சமாந்தரமாக மற்றொரு காரியத்தையும் செய்ய வேண்டும். அது என்னவெனில் உலகில் இருக்கக் கூடிய அரசல்லாத தரப்புக்களின் அபிப்பிராயத்தை தமிழ் மக்கள் தமக்குச் சாதகமாகத் திரட்ட வேண்டும்.
இந்த உலகம் அரசுகளுக்கு மட்டும் உரியதல்ல. அரசுகளுக்கு வெளியே ஒரு பரந்த பொதுசனத்தளம் உண்டு. அரச சார்பற்ற நிறுவனங்கள் மனித நேய அமைப்புக்கள் செயற்பாட்டியக்கங்கள், மத நிறுவனங்கள், ஊடகங்கள், பிரகாசமான தனிநபர் ஆளுமைகள், அறிவியல் அரங்குகள், படைப்பாளிகள், கருத்துருவாக்கிகள் என்று எல்லாத் தளங்களிலும் உலகப் பொது அபிப்பிராயத்தைத் திரட்ட வேண்டும். 2009ற்குப் பின் அனைத்துலக சமூகத்தைக் கையாளும் தமிழ் அரசியல் எனப்படுவது இந்த இயங்கு வெளிக்குள்தான் பெருமளவிற்கு முன்னெடுக்கப்படுகின்றது. ஜெனீவாவில் தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கும் இயங்கு தளமும் இதுதான். ஓர நிகழ்வுகள், நிழல் அறிக்கைகள் உத்தியோகப்பற்றற்ற சந்திப்புக்கள் பிரதான அரங்கில் இரு நிமிட உரைகள் போன்ற அனைத்து செயற்பாடுகளும் இந்த அரசல்லாத தரப்புக்களுக்குரிய இயங்கு வெளிக்குள் நிகழ்பவைதான்.
இந்த இயங்குவெளி அதிகபட்சம் தமிழ் டயஸ்பொறாவிற்கு உரியதுதான். 2009ற்குப் பின் தமிழ் டயஸ்பொறாவானது அனைத்துலக வெகுசன அபிப்பிராயத்தைத் திரட்டும் வேலையை குறிப்பிடத்தக்க அளவிற்கு செய்திருக்கிறது. ஆனாலும் போதாது. அது தொடர்பில் சரியான ஒரு வழிவரைபடமும் ஐக்கியமும் டயஸ்பொறாவிடம் இல்லை. தாயகத்திலும் இல்லை.
எனவே, அரசுகளுக்கு வெளியே காணப்படும் பெரும்பரப்பாகிய அனைத்துலக வெகுசனத்தின் அபிப்பிராயத்தை தமிழ் மக்களுக்கு சார்பாகத் திரட்டும் பொழுதும், ஜெனீவாவிற்கு வெளியே ஏனைய களங்களையும் தமிழ் மக்கள் கையாளும் போதும் ஒரு நாள் அரசுகளின் நீதியை தீர்மானிக்கும் வளர்ச்சியைப் பெறலாம். அந்த வளர்ச்சியைப் பெறும் வரையிலும் ஈழத்தமிழர்களின் அனைத்துலக அரசியல் எனப்படுவது ஜெனீவாவுக்குள்ளேயே பெட்டி கட்டப்பட்டுக் கிடக்கும். யாழ்ப்பாணத்திலிருந்து ஜெனீவா வரையிலும் எத்தனை ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு ஆர்ப்பரித்தாலும் ஜெனீவாத் தீர்மானங்கள் ரணிலுக்கும் நோகாமல் மகிந்தவிற்கும் நோகாமல் வெளிவந்து கொண்டிருக்கும்.


நிலாந்தன் 

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7