யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வாள்வெட்டு வன்முறைகளின் பிரதான சந்தேகநபரான மானிப்பாய் தனுறொக் என்பவர் தனங்களப்பில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் இன்று அதிகாலை (வியாழக்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக தலைமறைவாகியிருந்த இந்தச் சந்தேகநபரை யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளதுடன், அவரிடம் இருந்து 2 வாள்களும் , முகமூடிகள் மூன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
யாழ்ப்பாணம் சிறப்புக் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலையடுத்து அந்தப்பிரிவுக்குப் பொறுப்பான ரஞ்சன் எதிரிசிங்க தலைமையிலான அணியினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த சந்தேகநபர் கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.எனினும் அவரிடம் இருந்து வாள்களை பொலிஸார் பறிமுதல் செய்யவில்லை என்றும் அதற்காக சந்தேகநபரிடம் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை சாவகச்சேரி பொலிஸார் பெற்றுள்ளனர் என்றம் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை சந்தேகநபர் கைதுசெய்யப்படாமல் மறைந்திருப்பதற்கு சாவகச்சேரி பொலிஸார் உதவினர் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனாலேயே யாழ்ப்பாணம் சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவினர் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிலுள்ள தனங்களப்புக்குச் சென்று சந்தேநபரைக் கைதுசெய்துள்ளனர்.