அந்தப் பகுதியில் உள்ள ஸ்டீவன்சன் வீதியில், கடந்த புதன்கிழமை காலை 8.15 அளவில் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பணியாளர் ஒருவர், வீதியின் மேற்கு கரையில் குறித்த அந்த சடலம் அனாதரவாக கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த டூர்ஹம் பிராந்திய பொலிஸார், சடலத்தில் பலத்த அடி காயங்கள் காணப்பட்டதனை அவதானித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, குறித்த அந்த சடலத்துக்கு உரியவர் ஒன்ராறியோ, கிச்சனர் பகுதியைச் சேர்ந்த 43 வயது ஜேசன் ஜோன் பிரவுன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் நேற்று தகவல் வெளியிட்டனர்.
அந்தச் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகளும் நேற்று நிறைவு பெற்றுள்ள நிலையில், குறித்த அந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த அந்த நபர் காணாமல் போனதாக ஏற்கனவே செவ்வாய்க்கிழமை மாலை 6.30 அளவில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஒன்ராறியோ மாகாண பொலிஸாருடன் இணைந்து டூர்ஹம் பிராந்திய பொலிஸார் மற்றும் வோட்டலூ பிராந்திய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல் தெரிந்தவர்கள் 1-888-310-1122 or Crime Stoppers at 1-800-222-8477 என்ற எண்ணுக்கு தொடர்பை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.