டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்றிட்டத்தின் பிரதான முதலீட்டாளரான சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட Investment Vehicle Silver Park International PTE Ltd எனும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவரது நிறுவனம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறித்த முதலீட்டாளரான தமிழகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரான டொக்டர் எஸ். ஜெகரட்சகன் மீது பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் உள்ளதாக ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
இதன் காரணமாக குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் அரசியல் ரீதியாக எவ்வித ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்டுள்ளனரா என்பது தொடர்பாக இலங்கை முதலீட்டு சபை ஆராய வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாரிய வெளிநாட்டு முதலீடுகள் இடம்பெறும் போது, அவை உள்நாட்டு பொருளாதாரத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.
எனவே தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பிரிவு 9 இன் கீழ் குறித்த செயற்திட்டம் பற்றிய முழு விபரங்களும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பதாகவே பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.