மட்டக்களப்பு, மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள குறித்த வீடமைப்புத் திட்டங்களை வீடமைப்புத் துறை அமைச்சர் சஜித் பிரேமதாச திறந்துவைக்கவுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட முகாமையாளர் மா.ஜெகநாதன் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் சவுக்கடி கிராம சேவையாளர் பிரிவில் 26 வீடுகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள 177ஆவது வீட்டுத்திட்டமான கற்பகதரு கிராமமும், 24 வீடுகளைக் கொண்டதாக அமைந்துள்ள 178ஆவது வீட்டுத்திட்டமான நெய்தல் கிராமமும் இவ்வாறு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
நாடு பூராகவும் வீடற்ற மக்களின் வீட்டுத் தேவையை நிவர்த்திசெய்து நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கை அடிப்படையாகக் கொண்ட ‘செமட்ட சவன’ என்ற யாவருக்கும் வீட்டுத் திட்டம் என்ற திட்டங்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.
இதன்படி இதுவரை 176 வீட்டுத் திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக 177 மற்றும் 178வது வீட்டுத்திட்டங்கள் மட்டக்களப்பில் கையளிக்கப்படவுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 11 வீட்டுத் திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
7.5 இலட்சம் ரூபாய் மானியத்துடன், காணியும் இலவசமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்டு இந்த வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
சனிக்கிழமை நடைபெறவுள்ள கையளிப்பு நிகழ்வில், இராஜாங்க அமைச்சர்கள், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் திணைக்களத் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.