உனக்குக் கட்டளையிடப்பட்டவை பற்றி எண்ணிப்பார்| ஏனெனில் மறைந்துள்ளவை பற்றி நீ ஆராய வேண்டியதில்லை.
உனக்கு அப்பாற்பட்ட செயல்களில் தலையிடாதே| ஏனெனில் உனக்குக் கட்டளையிடப்பட்டவையே மனித அறிவுக்கு எட்டாதவை.”
நமக்கு அப்பாற்பட்டவை எவை? நமது அறிவை மீறியவை எவை? நம்;மால் அதை கணித்துக் கொள்ள முடியுமா? நம்மால் ஆராயப்படக் கூடியவை, நாம் தலையிடக் கூடியவை, நாம் ஆராய்ந்தறியக் கூடியவை எவை என்பதில் நமக்குள்ளேயே சிக்கல் தோன்றவே செய்யும். ஆழந் தெரியாமல் காலை விட்டுவிட்டு பின்னர் மூக்குடைபட்டுக் கொள்வது அறிவுடமையாகாது. “எண்ணித் துணிக கருமம்” என்கிறது வள்ளுவன் வாக்கு. அதே நேரம் திட்டமிட்டு ஒரு பணியைத் தொடங்காமல் பின்னர் இழுக்குப்பட்டு தலை குனிவதை விட திட்டமிட்டு பணியில் இறங்குவது மேலானது என்பதை இயேசு வீடு கட்டுபவன் ஒருவனுக்கிருக்க வேண்டிய திட்டமிடல், போர் தொடுக்க முன் அரசன் ஒருவன் ஆராய்ந்து பார்க்க வேண்டியவை பற்றி தன் உவமைகளால் எளிமையாக எடுத்தியம்புவதை மனதிற் கொண்டு, நம் கவனத்துக்குரிய விடயங்களில் மட்டும் நாம் இறங்குவது, நமது மரியாதையைக் காக்கும் என்றும்; மட்டுமல்லாது, நமது சக்தி, காலம், முயற்சி என்பவற்றை மீதப்படுத்தி நமக்கான விடயங்களில் வேகத்துடன் செயற்பட வழி சமைக்கும்.
பன்னிரெண்டாம் நிலை
இயேசு சிலுவையில் மரிக்கிறார் .. ..
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
“பகமை நிறைந்த சொற்களால் என்னை வாட்டினர்; காரணம் எதுவுமின்றி என்னை வதைத்தனர்.
“நான் காட்டிய அன்புக்குக் கைம்மாறாக என்மேல் குற்றஞ் சாட்டினர் நானோ அவர்களுக்காக மன்றாடினேன்.”
(சங். 108: 3, 4)
வித்தொன்றின் மரணத்தில்தான் புது வாழ்வொன்று பிறக்கின்றது. எனவே மரணம் வாழ்வுக்கு முடிவு அல்ல.
மரணங்கள் தீமைகளைத்தான் முடித்து வைக்கின்றன. ஏனெனில் நன்மைகள் ஒரு நாளும் மரணிப்பதில்லை.
நாம் விட்டுச் செல்லும் உள்ளங்களில் வாழும் வரை நமக்கு மரணம் என்பதேது?
மரணம் எம்மை மனித உள்ளங்களில் விதைத்துச் செல்லுகின்றது.
மரணத்தின் நினைவுகள் பயங்கரம் தரலாம், ஆனாலும், மரணம் நமக்குப் பயங்கரம் தரலாகாது. அது நமக்குப் புதுவாழ்வுக்குப் பூபாளம் இசைக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், மரணம் வாழ்வுக்கு எதிரானவைகளுக்குத்தான் அஸ்தமனத்தைக் கொண்டு வருகிறது.
இயேசு சிலுவையில் மரிக்கவில்லை – சிலுவைக்குத்தான் மரித்தார்;| பாவத்திற்கு மரித்தார்.அதனாலேயே வாழ்வு பிறந்தது – உண்மை வாழ்வுக்கு மரணம் ஒரு உதயம்.
தீமை புரிந்தோர் நாண நன்னயம் செய்தல் தீமையைச் சாகடிக்கும் ஒரு செயல்தான்.
சிந்திப்போம்:
தீமைகளைச் சாகடிக்கும்படி நன்மைகளைச் செய்ய எனக்கு மனம் தந்த இயேசுவே உமக்கு நன்றி!
எம் வாழ்வுக்காய் மரணத்தைத் தைரியமாய் எதிர் நோக்கும் அருள் தரும் இறiவா உமக்கு நன்றி!
என்னைப் பாதிப்பவர் தமை மன்னித்து, “அறியாமற் செய்கிறார்கள்.” என்று பெருமனத்தோடு கூறுகின்ற வரம் எனக்குத் தருகின்ற இறiவா உமக்கு என் நன்றி!
எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!