சர்வதேச மகளிர் தினமான இன்று(வெள்ளிக்கிழமை) காலை 08 மணியளவில் அம்பாறை திருக்கோவில் வாக்ரிஷா வீதியில் அமைந்துள்ள சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர் தம்பிராசா செல்வராணியின் தலைமையில் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றினை தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த பெண்கள் கறுப்பு கொடிகளை பறக்க விட்டு அரசுக்கு எதிரான தமது கோசங்களை எழுப்பி எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி>இம்முறை நாம் சர்வதேச மகளிர் தினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டிக்க முடிவு செய்துள்ளோம் காரணம் பெண்களாகிய எங்களுக்கு விடுதலை இல்லை, சுதந்திரமில்லை இன்று எமது கணவன்மார்களையும் உறவுகளையும் தொலைத்து 10 வருடங்களாகியும் உறவுகளின் வருகையை எதிர்பார்த்து பல தாய்மார்கள் மரணித்துப் போன நிலையிலும் எமக்கான தீர்வு ஒன்று வழங்கப்படவில்லை.
பெண்களாகிய எங்ளுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கின்றதோ எமது உறவுகள் என்று வருகின்றார்களோ அல்லது நியாயமான தீர்வு கிடைக்கின்றதோ அன்றுதான் நாம் இந்த சர்வதேச மகளிர் தினத்தினை மகிழ்சியாக கொண்டாடுவோம் என தெரிவித்திருந்தார்.
இங்கு தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர் ஜ.நாடு சபையின் 40வது கூட்டத் தொடர் தற்போது இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்ற நிலையில் வடக்கு,கிழக்கில் உள்ள எமது அமைப்புக்களை அழைத்து எம்மோடு ஒரு கருத்துக்களும் கேட்காது தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கு சென்று யாருக்கு சார்பாக கதைக்கப்போகின்றார்கள் என கேள்வி எழுப்பியிருந்ததோடு எமக்கான நியாயமான தீர்வுகள் கிடைக்கும் வரை போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு கொண்டே இருக்கும் என தெரிவித்திருந்தார்.