இது தொடர்பாக தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மத்திய அரசின் தலைமை சட்டத்தரணி தெரிவித்துள்ளார். இந்த ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான மீள்பரிசீலனை மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும் என சட்டத்தரணி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணங்கள் மிக ரகசியமானவை எனவும் அவற்றை வெளியிடுவது உத்தியோகப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறுவதாகும் எனவும் அவர் கூறியுள்ளார். இவற்றை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடும் நபர்கள் குறித்த சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் எனவும் அவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, ரபேல் போர் விமான பேரம் தொடர்பான முக்கிய அம்சங்களை கணக்கில் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கப்பட்டதாக சட்டத்தரணி பிரசாந்த் பூஷன் தெரிவித்தார்.
இதற்கு மத்திய அரசின் சார்பில் மன்றில் ஆஜரான தலைமை சட்டதரணி வேணுகோபால் ராணுவ அமைச்சகத்திடம் இருந்த ரபேல் போர் விமான பேரம் தொடர்பான அதிமுக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ரபேல் போர் விமான கொள்வனவில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தள்ளுபடி செய்யப்பட்டது.
ரபேல் போர் விமான கொள்முதலில் வழக்கமான நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்த விளக்கம் திருப்திகரமாக இருப்பதால் இதில் விசாரணை தேவை இல்லை என கருதுவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த தீர்ப்பு தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சட்டத்தரணி பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட சிலர் உயர்நீதிமன்றம் மீள்பரிசீலனை மனுவை தாக்கல் செய்தனர்.