அவரது முன்னாள் மனைவி மற்றும் அவருக்கு பிறந்த பிள்ளைகள் குறித்த விபரங்களை வேட்புமனுவில் மறைத்ததன் மூலம், பிரதமர் இம்ரான் கான் அரசியல் சாசனத்தை மீறிவிட்டதாகக் கூறி லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேட்புமனுவில் உண்மையை மறைத்துள்ளதன் மூலம், நாட்டின் பிரதமர் நேர்மையானவராக இருக்க வேண்டும் என்ற அரசியல் சாசனத்தின் 62 மற்றும் 63ஆவது பிரிவுகளை மீறியுள்ளதால், பிரதமரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரித்தானியாவைச் சேர்ந்த அவரது முன்னாள் மனைவி அனாலூய்சா ஒயிட் என்பவரது மகள் டிரியன் ஒயிட், இம்ரான் கானுக்குப் பிறந்தவர் என்று கருத்துக்கள் பரவியிருந்தது.
அந்ந வகையில், கடந்த ஆண்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட இம்ரான் கான், தனது வேட்புமனுவில் டிரியன் ஒயிட் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என கூறப்படுகின்றது. தனக்கு பிரித்தானியாவில் ஒரு மகள் இருப்பதை வேட்புமனுவில் உண்மையை மறைத்ததன் காரணமாக, பிரதமர் இம்ரான் கான் அரசியல் சாசனத்தை மீறிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.