அஜித்தின் 59ஆவது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தலைப்பை வெளியிடாமல் வைத்திருந்தனர். இந்நிலையில், திரைப்படத்தின் தலைப்பு ‘நேர் கொண்ட பார்வை’ என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
மகாகவி பாரதியின் வைர வரியை தலைப்பாக வைத்திருப்பது படக்குழுவினரின் சிறப்பான அம்சமென கருதப்படுகின்றது.
அரசியல், பொலிஸ் பின்புலம் உள்ள ஒருவர் மூன்று பெண்களுக்கு தரும் தொல்லைகளும், அதில் இருந்து அந்த பெண்கள் விடுபட ஒரு வழக்கறிஞர் மேற்கொள்ளும் முயற்சிதான் இத்திரைப்படத்தின் கதையாகும். இதில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் அஜித் நடித்து வருகின்றார்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கின்றார். இம்மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் முடிந்து எதிர்வரும் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்திரைப்படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், அஸ்வின் ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
