ஐ.நா.வில் மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதனையும் சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) கிழக்கில் மாபெரும் எழுச்சிப் பேரணி நடைபெறவுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவிக்கையில், “தமிழ் மக்களிற்கு எதிரான அடக்குமுறைகள் இலங்கையில் நீண்ட காலமாக கட்டமைக்கப்பட்ட ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அத்தகைய அடக்குமுறைகள் இலங்கைத் தீவில் திட்டமிடப்பட்ட ரீதியிலான தமிழ் மக்களிற்கு எதிரான இனச்சுத்திகரிப்பாகவே உள்ளது.
அத்தகைய இனச் சுத்திகரிப்பின் உச்சமே இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டும், காணாமலாக்கப்பட்டதுமாகும். ஈழத் தமிழர்களிற்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பு போர்க்குற்ற மீறல்கள், மனித உரிமைச் சட்ட மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள்களுக்குரிய பரிகார நீதியினை சர்வதேசம் தமிழ் மக்களுக்கு பெற்றுத்தர நாம் விழிப்போடு மக்கள் எழுச்சிப் போராட்டங்களினை முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு எமக்குள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினால் 2015இல் முன்மொழியப்பட்ட நிலைமாறு கால நீதிப் பொறிமுறைக்கு ஊடான உள்ளக பொறிமுறைகளினையே இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறிய நிலையிலும் ஏற்கனவே கால அவகாசங்கள் வழங்கப்பட்ட நிலையிலும் மீண்டும் கால அவகாசமே வழங்கப்படவுள்ளது. இதனை வெறும் கண்துடைப்பு நாடகமாகவே நாம் நோக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் ஈழத் தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு நீதியினை கோரி நாளை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் பூரண ஆதரவு வழங்குகின்றது.
இவ்வகையில் நீதி கோரி இடம்பெறவிருக்கும் மக்கள் எழுச்சிப் பேரணியில் அனைத்துத் தமிழ் பேசும் மக்களும் பங்குபற்றி பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.