இதுதொடர்பாக அல் ஜஸீரா தொலைக்காட்சி நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதில் “சவுதி துணைத் தூதரின் இல்லத்தில் சமீபத்தில் கொதி உலை ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த உலையானது சுமார் 1,000 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் தாங்கக் கூடிய ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளது.
இது முழுவதுமாக துணைத் தூதரின் ஆலோசனையின்படி உருவாக்கப்பட்டது. இந்த பணிகளை துருக்கிய அதிகாரிகள் கண்காணித்தார்கள் என்று கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலார் ஒருவர் கூறியுள்ளார்.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஊடகவியலார் ஜமால் கஷோக்கி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கு வெளியாகும் வொஷிங்டன் போஸ்ட் நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்த அவர், சவுதி அரசையும், அந்த நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்தச் சூழலில், சில ஆவணங்களைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி சென்றார்.
ஆனால், அதன் பின்னர் அவரைக் காணவில்லை. தூதரகத்துக்குள் அவரை சவுதி அனுப்பிய ஆட்கள் கொன்று விட்டதாக துருக்கி குற்றம் சாட்டியது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆரம்பத்தில் மறுத்து வந்த சவூதி அரேபியா, 18 நாட்களுக்குப் பின்னர் தங்களது துணைத் தூதரகத்தில் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி படுகொலை செய்யப்பட்டதை ஒப்புக் கொண்டது.
சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரில்தான் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பரவலாக சந்தேகிக்கப்படுகிறது.
வெட்டப்பட்ட அவரது உடல் பாகங்கள் உள்ள பிளாஸ்டிக் பைகள், துணைத் தூதரகத்துக்கு அருகில் உள்ள சவுதி தூதரின் இல்லதிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், தூதரின் வீட்டுச் சுவற்றில் ரத்தக்கறைகள் கண்டறியபட்டதாகவும் முதலில் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் துணைத் தூதரகத்தில் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட சவுதி ஊடகவியலாளர் கஷோகி, தூதரின் இல்லத்தில் உள்ள அடுப்பில் வைத்து எரிக்கப்பட்டார் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
