அத்துடன் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்றவர்கள் எம்மை கைவிட்டு அநாதைகளாக்கியமையாலே நாம் இன்று போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் வளைவு உடைக்கப்பட்டமையைக் கண்டித்து வவுனியா கந்தசாமி கோவில் முன்றலில் இன்று (புதன்கிழமை) வவுனியா இந்து ஆலயங்களின் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தெரிவிக்கையில், “ஒரு மதத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற குரு கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது மாத்திரமல்லாது அந்த செயலால் ஏற்படக்கூடிய சட்ட நடைமுறைகளை தவிர்த்துக் கொள்வதற்காக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டார்கள்.
இச்சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட பின்னரும் கூட அந்த மதகுருவோ அல்லது அவருடன் சேர்ந்து இயங்கிய கூட்டமோ கைது செய்யப்படவில்லை.
பதில் நீதிபதி வரும்வரை கத்திருந்தார்கள். அவர் ஒரு சைவர் அல்ல. அவ்வாறான ஓர் நிலையில் சென்ற அனைவருமே பிணையை பெற்றுக்கொண்டார்கள். அந்த மதகுருவுக்கு இந்த செயலில் தனது பங்கு என்ன என்பது நன்றாக தெரியும். ஆனாலும் அவர் சாதாரண குற்றவாளியைப்போல ஒரு கொலையாளியைப்போல பதுங்கியிருந்தார்.
நீதிமன்றம் அவரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்ட அன்றோ அல்லது அடுத்தநாளோ அவர் மன்றின் முன் சென்று தனக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டு குறித்து பேசவில்லை.
நீதிபதிக்கு சனி, ஞாயிறு தினங்களில் விடுமுறை எடுப்பது வழக்கம். அப்பொது பதில் நீதிபதி வருகை தருவார். வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் பதில் நீதிபதியின் வருகையை சாதகமாகப் பயன்படுத்தி ஒரு சமய ஸ்தாபனத்தினை கேலிக்கூத்தாக்கிய 10 பேரையும் ஒரே நாளில் விடுதலை செய்தார்கள்.
இந்த அநியாயங்களை நாம் பார்த்திருக்க முடியாது. எமது குரல் அந்த அநியாயக்காரர்களின் காதில் ஓங்கி ஒலிக்கவேண்டும். அவர்கள் செய்கின்ற சூழ்ச்சிகள், செய்கின்ற தவறுகள் அவற்றில் இருந்து விடுபடுவதற்கு செய்கின்ற மேலதிக சூழ்ச்சிகள் அனைத்தினையும் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே இந்த உண்ணாவிரத்தினை ஏற்பாடு செய்திருந்தோம்.
பெருந்திரளானவர்கள் இந்த உண்ணாவிரத்திற்கு வருகை தந்தமை மகிழ்ச்சிக்குரியது. எனினும் எமக்குள்ள கவலை என்வென்றால் வவுனியாவில் 99 வீதமானவர்கள் சைவர்கள். யாழ்ப்பாணத்தில் குறைந்தது 75 வீதமானவர்கள் சைவர்கள். இந்த இரண்டு மாவட்டத்தில் இருந்தும் திருக்கேதீஸ்வர ஆலய அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை.
எங்களுடைய அரசியல்வாதிகள் எங்கள் வாக்குகளில் நாடாளுமன்றம் சென்றவர்களும் வாய் மூடி மௌனிகளாகவுள்ளனர். எமக்காக குரல் கொடுத்தால் அவர்களுக்கு வாக்கு கிடைக்காமல் விட்டுவிடுமோ என்கின்ற பயம். இந்த அரசியல்வாதிகளால் தான் நாம் தனித்துவிடப்பட்டு அநாதைகளாக்கப்பட்டுள்ளோம். எது அநீதி என தட்டிக் கேட்கவேண்டிய அரசியல்வாதிகள், அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் எம்மை கைவிடும்போது நாம் அநாதைகளே. நாம் அரசியல் பாலமற்ற ஏழைகளாக்கப்பட்டுள்ளோம். யாரிடம் கையேந்துவது என் தெரியாதவர்களாக இருக்கின்றோம்.
இந்த நிலைகளை பார்க்கும் போது நாங்கள் எங்களைக் காப்பாற்றவேண்டிய சந்தர்ப்பம் வந்துவிட்டது. இன்னுமொரு ஆறுமுகநாவலர் வரமாட்டார். நாங்கள் ஒவ்வோருவரும் ஆறுமுகநாவலராகினால் தான் எங்கள் சமயம் வாழும். எனவே அநீதிக்கு எதிராக போராடத் துணியுங்கள். நாங்கள் கைகோர்த்து நின்று அநீதியை எதிர்க்கவேண்டும். அவ்வாறு செய்தாலேயே இறைவன் கூட அநீதி வலையில் சிக்கியிருந்தாலும் வெளியில் வருவான்” என தெரிவித்தார்.