சரத் வீரசேகர தலைமையிலான இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பினருக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்தே இந்தக் குழுவினர் இடைநடுவில் வெளிநடப்புச் செய்தனர்.
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) இலங்கை குறித்த விசேட உபகுழுக் கூட்டம் நடைபெற்றது.
பசுமை தாயகம் அமைப்பு ஏற்பாடு செய்த இலங்கை குறித்த விசேட அமர்வு இன்று ஜெனிவாவில் குழு அறையில் நடைபெற்றது. இதில் இலங்கை தமிழ் மக்களின் பிரதிநிதிகளான எம்.ஏ.சுமந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளான பாதிரியார் இம்மானுவேல் சுரேந்திரன் மற்றும் தென்னிலங்கையின் இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பின் சரத் வீரசேகர தலைமையிலான பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர். அத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.
இதன்போது இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறப்படவேண்டும் என்றும் குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இதன்போது விசனமடைந்த இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பின் பிரதிநிதி சரத் வீரசேகர, இராணுவத்தினர் மீது குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது என்றும் இராணுவத்தினரே யுத்தத்துக்கு பின்னரான மீட்புப் பணிகளை முன்னெடுக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து சரத் வீரசேகர தலைமையிலான இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பினருக்கும் புலம்பெயர் அமைப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டநிலையில் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் இடைநடுவில் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.