பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோரை ஆபாசமாக காணொளி எடுத்து, பின்னர் அதனைக் காட்டி, மோசடியில் ஈடுபட்ட குழுவை பொலிஸார் அண்மையில் கைது செய்தனர். மேலும் குறித்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.யினர் தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென யூ-டியூப், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்- அப் ஆகிய நிறுவனங்களுக்கு கடிதமொன்றையும் சி.பி.சி.ஐ.டி.யினர் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு யூ-டியூப்பில் மீண்டுமொரு காணொளி வெளியாகியது. அதில் பொள்ளாச்சி கும்பலால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவரென இளம்பெண்ணொருவர் பேசியுள்ளார்.
மேலும் குறித்த கும்பல் சிறுமியொருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதில் அவர் உயிரிழந்து விட்டார். பின்னர் அச்சிறுமியின் உடலை திருநாவுக்கரசு வீட்டின் பின்புறத்தில் அவர்கள் புதைத்து விட்டனர் எனவும் அக்காணொளியில் குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
ஆகையால் இத்தகவலின் உண்மை தன்மையை கண்டறியும் பொருட்டு, காணொளியை பதிவேற்றியவர் குறித்து தகவலை பெற்றுகொள்வதற்கு யூ-டியூப் நிறுவனத்தினரின் உதவியை சி.பி.சி.ஐ.டி.யினர் நாடியுள்ளார்.
இவ்விடயத்தில் தங்களுக்கு வேண்டிய தகவலை வழங்குமாறு யூ-டியூப் நிறுவனத்திற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.