ரஃபேல் விவகாரம் குறித்து ப.சிதம்பரம், தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று (வியாழக்கிழமை) இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“ரஃபேல் விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19, மக்களின் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை உறுதி செய்துள்ளது.
அந்தவகையில் உயர் நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் விவாதிக்கும்போது, ”திருடப்பட்ட இரகசிய ஆவணங்களை ஊடகங்கள் வெளியிட முடியாது” என்று கூறியுள்ளார்.
இவருடைய இக்கருத்துக்கு ‘பென்டகன் பேப்பர்ஸ்’ என்றழைக்கப்படும் இரகசிய ஆவணங்கள் வெளியீடு தொடர்பாக அமெரிக்க உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியான பதிலாக அமையும்.
அந்தவகையில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை பிரசுரிக்க நாங்கள் ஆதரவளிக்க தயாராக உள்ளோம்” என ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ரஃபேல் போர் விமான கொள்முதல் முறைகேட்டில் விசாரணை நடத்த தேவையில்லையென உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யகோரி மனு தாக்கல் செய்யப்பட் டுள்ளது.
குறித்த வழக்கின் மனு மீதான விசாரணை நேற்றுமுன்தினம், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு உட்படுத்தியது.
இதன்போது மத்திய அரசு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அட்டர்னி ஜெனரல்கே.கே.வேணுகோபால், ”பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் இருந்து ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பகிரங்கமாக பிரசுரிக்க வேண்டுமென முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.