பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டர்கிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பிரதித் தலைவர் டெல்லியில் இன்று (புதன்கிழமை) இந்திய நாடாளுமன்ற குழுவைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் சாதக மற்றும் பாதகமான விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதுடன், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் குறித்த சமூக ஊடகங்களின் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும் என கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் இன்று நாடுகளின் ஜனநாயகத்தை கேள்விக்குட்படுத்தியுள்ளதாக இந்திய நாடாளுமன்றக் குழு இதன்போது தெரிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பேஸ்புக் உள்ளிட்ட வெளிநாட்டு சமூக ஊடகங்களின் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியது.
சமூக ஊடகங்களின் பயன்பாடு தொடர்பிலான கேள்விக்கொத்து ஒன்றையும், சமூக வலைதளங்களின் பிரதித்தலைவர் ஜோயல் கபிலனிடம் நாடாளுமன்றக் குழு கையளித்துள்ளது.
அந்த கேள்விகளுக்கான பதில்களை 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்றக்குழு கேட்டுள்ளது.
இதேவேளை இந்தியாவில் 300 மில்லியன் மக்கள் பேஸ்புக்கையும், 200 மில்லியன் மக்கள் வட்ஸ்அப்பையும் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.