தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டசபைத் தொகுதிகளிலும் கடந்த 19 ஆம் திகதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. மனுத் தாக்கலுக்கு 26 ஆம் திகதியான இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் நேற்று மாலை வரை தாக்கலான 613 மனுக்களில் 75 பேர் மட்டுமே பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2 பேர் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள். அதுபோல 18 சட்டசபைத் தொகுதிகளின் இடைத் தேர்தலுக்கு மனு செய்துள்ள 232 பேரில் 38 பேர் மட்டுமே பெண்கள் என்று தெரியவந்துள்ளது.
வேட்பு மனுத் தாக்கலுக்கு கடைசி நாளான இன்று வேட்பாளர்கள் போட்டி போட்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். எனவே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களின் எண்ணிக்கை 650 வரை உயர வாய்ப்புள்ளது. அதுபோல 18 தொகுதி இடைத் தேர்தல்களில் களம் இறங்குபவர்களின் எண்ணிக்கையும் 250 வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பு மனுவை 28, 29ஆம் திகதிகளில் திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று வேட்பாளர்கள் அனைவரும் அன்றைய தினம் தங்களது வேட்புமனுவைத் திரும்ப பெறுவார்கள்.
அத்துடன் 29ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகள் வெளியிடுவார்கள். அன்றைய தினமே அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அவர்களுக்கு உரிய சின்னங்களும், சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கி அறிவிக்கப்படும்.
தேர்தல் பிரசாரத்துக்கு மார்ச் 30ஆம் திகதி முதல் ஏப்ரல் 16 ஆம் திகதி வரை 18 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18 ஆம் திகதி வாக்குப்பதிவு ஆரம்பிக்கப்பட்டு மே மாதம் 23 ஆம் திகதிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.