தற்போது சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் பால் மாவைக் கவனத்தில் கொள்வோம். உண்மையில் பால் மாவானது விளம்பரங்களின் மூலமாக மக்கள் மீது பலவந்தமாகத் திணிக்கப்பட்ட ஒன்று. தொலைக்காட்சி வழியாகவும், சுவரொட்டிகள் வழியாகவும் தமது பால் மாவே சிறந்ததெனக் கூறியவாறு மனிதர்களின் மூளையில் திணிக்கப்படும் விளம்பரங்கள், 'பால் மாவைக் கலந்து பருகாவிட்டால் அந் நாளே உற்சாகமற்றதாகி விடுகிறது' போன்ற எண்ணமாக பரிமாற்றம் அடைந்து விடுகின்றன.
விளம்பரங்களின் மூலமாக, பால் மா இலங்கையில் இன்றியமையாத பொருளாக பட்டியலிடப்பட்டிருக்கிறது. அந்த அத்தியாவசியமான பொருளைப் பயன்படுத்தும் மக்கள் இன்று குழப்பமான மனநிலையில் தவித்திருக்கிறார்கள். பால் மாவைக் கரைத்துக் குடிப்பதா வேண்டாமா? குழந்தைகளுக்கும் விஷத்தைப் புகட்டி, தாமும் அருந்தும் நிலைப்பாடா இது? பால் மா குறித்து இன்று பரவியிருக்கும் செய்திகள் உண்மையா? பொய்யா? போன்ற சந்தேகங்கள் பொதுமக்களை உசுப்பி விட்டிருக்கின்றன. பால் மா பாக்கெற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் விட்டமின்கள், புரதம், கொழுப்பு போன்றவை உண்மையிலேயே அப் பால் மாவில் அடங்கியிருக்கின்றனவா? என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்திருக்கிறது.
அரசாங்கமானது பால் மாவை பல வழிகளில் மக்கள் மீது திணித்துக் கொண்டேயிருக்கிறது. பால் மாவுக்குப் பதிலாக தினமும் பருக தூய பசுப்பாலையோ, இலைக் கஞ்சியையோ பயன்படுத்தினால் நீடித்த ஆரோக்கியம் கிடைப்பதோடு செலவும் குறையும். பால் மாவின் தீமைகளை மக்கள்தான் உணர்ந்து அவற்றைப் புறக்கணிக்கத் தயாராக வேண்டும். இனி, பால் மா விவகாரத்துக்கு வருவோம்.
கடந்த 2018 ஆண்டில் மாத்திரம் 96000 மெற்றிக் தொன் பால்மா இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. அதற்கிணங்க இலங்கை மக்கள் 271 மெற்றிக் தொன் பால் மாவை ஒரு நாளில் பாவித்திருக்கிறார்கள். இவ்வாறாக உலகில் அதிகளவான பால் மாவைப் பயன்படுத்தும் இலங்கை மக்களுக்கு முக்கியமான ஒரு விடயத்தை கைத்தொழில் வாணிப பிரதி அமைச்சர் புத்திக பதிரண பாராளுமன்றத்தில் வைத்து வெளிப்படுத்தியிருக்கிறார்.
'வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களில் மெலமைன், பன்றிக் கொழுப்பு, பாம் ஒயில் ஆகியனவே அடங்கியிருக்கின்றன. பால் மா என்ற பெயரில் எமக்கு அனுப்பி வைக்கப்படுபவை பாம் ஒயிலும், லெக்டோஸும் கலந்த கலவைத் தூள்தான்' என்ற அவரது கூற்று வெறுமனே வெளிப்பட்டதல்ல. அவர் இதனை வெளிப்படுத்த முன்னர், இவ்வாறாக இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களின் தரத்தைப் பரிசீலிக்குமாறு நுகர்வோர் அதிகார சபையிடம் உத்தரவிட்டிருக்கிறார்.
நுகர்வோர் அதிகார சபை, பால் மாக்களின் தரத்தைப் பரிசீலிக்க அவற்றின் மாதிரிகளை தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைத்திருக்கிறது. அம் மாதிரிகளைப் பொறுப்பேற்ற தனியார் நிறுவனமானது, ஒரு கிழமை எனும் குறுகிய காலத்துக்குள் அளித்த பதிலில், அப் பரிசோதனையைத் தம்மால் செய்ய முடியாதென தீவிரமாக மறுத்திருக்கிறது. இதன் பின்னணியில் மறைவாக ஊழலும், கலப்படமும் கலந்த எதுவோ இருக்கிறதென அமைச்சருக்குத் தோன்றியிருப்பது அப்போதுதான்.
பால்மா சம்பந்தமான அமைச்சர் புத்திக பதிரணவின் கூற்றை இலங்கை சுகாதார, போஷணை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சு மறுத்திருக்கிறது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களில் பிற விலங்குக் கொழுப்புக்களோ, தாவர எண்ணெய்களோ அடங்கியிருப்பதில்லை என்பதைத் தம்மால் நிரூபிக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்ஹ தெரிவித்திருக்கிறார். சுகாதார அமைச்சின் சார்பாக வந்த இக் கூற்றை எதிர்த்துப் பேசிய அமைச்சர் புத்திக பதிரண இவ்வாறான ஊழல்கள் உருவாகும் விதத்தை அண்மையில் பாராளுமன்றத்தில் வைத்து பகிரங்கப்படுத்தினார்.
சுகாதார அமைச்சில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் பலருக்கும், அதன் பிறகு பால் மா நிறுவனங்கள் பலவும் உயர் வேலை வாய்ப்புக்களை வழங்கியிருப்பது வெறுமனேயல்ல என்பதை அமைச்சர் சுட்டிக் காட்டியதோடு சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர் விபரங்களையும், தற்போது வகிக்கும் பதவிகளையும் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார். அத்தோடு சுகாதார அமைச்சு மௌனமாகிப் போயிற்று.
இவ்வாறான நிலைமைகளிருக்கும்போது, அரசாங்க நிறுவனத்தால் பால் மாக்களுக்கு வழங்கப்படும் தரச் சான்றிதழைக் குறித்து பல விதத்தில் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஒரு தேசத்துக்குள் பால் மாவுக்காக வழங்கப்படும் தரச் சான்றிதழ் போலவே, பால் மாவுக்கு வழங்கப்படும் உலகத் தரச் சான்றிதழ் என்ற நடைமுறையும் இருக்கிறது. எனினும் இலங்கை அந்த ISO தரக் கட்டுப்பாட்டில் இணையவில்லை.
இலங்கையில் எந்தத் தயாரிப்பினதும் தரத்தினை நிர்ணயிப்பது இலங்கை தரக் கட்டுப்பாட்டுச் சபைதான். இதில் பால் மா சம்பந்தமான தரக் கட்டுப்பாடு 1991 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு பால் மாக்களின் தரங்கள் பரிசீலிக்கப்பட்டிருப்பது 91 ஆம் ஆண்டின் தரக் கட்டுப்பாட்டை அடிப்படையாக வைத்துத்தான். பால் மாவில் அடங்கியிருக்கும் இரசாயனப் பதார்த்தங்களோடு, கொழுப்பின் அளவும் இங்கு கவனத்தில் கொள்ளப்படுகிறது. முழு ஆடைப் பால் மாவில் 26% அல்லது அதற்கும் மேற்பட்ட அளவில் கொழுப்பு அடங்கியிருத்தல் வேண்டும்.
அவ்வாறு தரக்கட்டுப்பாட்டுச் சபையின் அனுமதியோடு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முழு ஆடைப் பால் மாக்களில் கொழுப்பும், புரதமும் அகற்றப்பட்டு, அவற்றைக் கொண்டு புரதச் சத்து அதிகளவில் அடங்கிய பால் மாக்களும், பட்டர், சீஸ் போன்ற பாலுணவுப் பொருட்களும் தயாரிக்கப்படுவதாகவும், கொழுப்பும், புரதமும் அகற்றப்பட்ட எந்தச் சத்துமற்ற வெறும் சக்கைத் தூள் பால்மாக்கள் மாத்திரமே இலங்கைக்குள் விநியோகிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இப் பால் மாக்களின் தரத்தை மேம்படுத்திக் காட்ட இவற்றுக்கு மெலமைனையும், டீ.சீ.டீ (Dicyandiamide) போன்ற நச்சு இரசாயனப் பதார்த்தத்தையும் சேர்த்து போலியாக புரதச் சத்தை அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இப் பால் மாக்களிலிருந்து அகற்றப்படும் கொழுப்பை ஈடு செய்ய பன்றிக் கொழுப்பு, பாம் ஒயில் போன்ற கொழுப்புப் பதார்த்தங்கள் இவற்றில் சேர்க்கப்படுகின்றன எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இவ்வாறான தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளின் காரணமாக 2008 ஆம் ஆண்டு பால் மா சம்பந்தமான SLS தரக் கட்டுப்பாட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நிலைமை தரக் கட்டுப்பாட்டுச் சபைக்கு ஏற்பட்டது. அதற்குப் பிறகு, பால் மாவின் ஈரத் தன்மையும், பால் மாக்களில் அடங்கியிருக்க வேண்டிய கொழுப்புக்குப் பதிலாக வேறு விலங்குக் கொழுப்புகளோ, தாவர எண்ணெய்களோ அடங்கியிருக்கின்றனவா எனவும் பால் மாக்கள் பரிசோதித்துப் பார்க்கப்படுகின்றன.
எவ்வாறாயினும், பால் மாக்களில் புரதச் சத்துக்காக மெலமைனும், டீ.சீ.டீ.யும் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கும் பரிசோதனை இலங்கையில் நிகழ்த்தப்படுவதில்லை. மெலமைனும் டீ.சீ.டீ.யும் கலக்கப்படவில்லை என்ற உறுதிச் சான்றிதழை, பால் மாக்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பரிசோதனை நிலையங்களே வழங்கி வருகின்றன. எனவே அவற்றின் நம்பகத் தன்மை கேள்விக்குரியது.
இலங்கையில் பரிசோதிக்கப்படும் SLS பரிசோதனையில், பால்மாக்களில் தேர்ந்தெடுக்கப்படும் சில மாதிரிகளே கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு பால் மா பாக்கெற்றையும் பரிசோதனை செய்வது சாத்தியமற்றது. அத்தோடு இலங்கையில் பரிசோதனை நிலையத்திலிருக்கும் உபகரணங்கள் தரப் பரிசோதனைக்கு எந்தளவு உபயோகமாகும் என்பதை உறுதியாகக் கூற முடியாது.
எனவே இறக்குமதி செய்யப்படும் பால் மாக்கள் தொடர்பாக நியாயமானதும், சுயாதீனமானதுமான பரிசோதனையை நடத்துமாறு பாராளுமன்றத்தால் நுகர்வோர் அதிகார சபைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அப் பரிசோதனையை வெளிநாட்டில்தான் செய்ய வேண்டும் என அச் சபை தெரிவித்திருக்கிறது. காரணம் பால் மா சம்பந்தமான ஒழுங்கான பரிசோதனையை நடத்தத் தேவையான உபகரணங்கள் இந் நாட்டில் இல்லாமையே.
இப் பிரச்சினைக்குத் தீர்வாக, இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களுக்குப் பதிலாக, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாக்களைப் பயன்படுத்தலாம். ஆனால் அதிலுள்ள சிக்கல் என்னவென்றால், அவ்வாறான உற்பத்தியும் கூட இலங்கை மக்களில் 8-10% மக்களுக்கே போதுமானதாகும். அதன் பிறகும் கூட ஏனைய 90% பால்மாவை இறக்குமதி செய்ய வேண்டி வரும்.
‘பால் மா பாவனையே வேண்டாம். தூய பசும்பாலையே பயன்படுத்த வேண்டும்' என்பதை இப் பிரச்சினைக்கான தீர்வாக, சில தேசிய நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன. அவ்வாறான ஒரு தீர்வினை ஏற்றுக் கொள்ளக் கூட இலங்கையில் அதற்குரிய வளங்கள் இருக்க வேண்டும், அல்லவா?
தூய பசும்பால் உற்பத்திக்குத் தேவையான பிரதான வளங்கள் பாற்பண்ணையாளர்களும், பசுக்களும்தான். பாற்பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அனேகமானவை. பிரதானமானது, அரசாங்கத்தால் இறக்குமதி செய்யப்பட்டு வழங்கப்பட்ட பசுக்களின் திடீர் மரணங்கள். நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர் தர பசுக்களென்று கூறப்பட்ட பசுக்கள் ஒரு நாளில் 15-20 லீற்றர்கள் பால் கறக்கும் என பண்ணையாளர்களிடம் கூறப்பட்டபோதிலும், அவை நான்கைந்து லீற்றர் பால் கறந்ததுமே செத்துப் போய் விட்டன. அரசிடமிருந்து இப் பசுக்களை வாங்கச் செலவழித்த பணம் வீணாகிப் போனதைச் சுட்டிக் காட்டி பாற்பண்ணையாளர்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தைக் கூட அண்மையில் நிகழ்த்தியிருந்தார்கள்.
இலங்கையில் கிட்டத்தட்ட மூன்று இலட்சம் பாற்பண்ணையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருக்கும் பசுக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 13 இலட்சங்கள். அவற்றிலிருந்து தினந்தோறும் பன்னிரண்டு இலட்சம் லீற்றர்கள் பாலைப் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறாகக் கணக்கிட்டுப் பார்த்தால் கூட இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்க இந்தத் தொகை போதாது.
எனினும், அரசாங்கம் தீவிரமாக முயற்சித்தால் இலங்கையில் பால் உற்பத்தியை அதிகரித்து இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் தூய பசும்பாலையே உபயோகிக்க வழியமைக்கலாம். சில தசாப்தங்களுக்கு முன்பு இலங்கை பால் உற்பத்தியில் முன்னிலை வகித்திருக்கிறது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, அனுராதபுரம், கந்தளை போன்ற பிரதேசங்கள் அனைத்திலும் பால் உற்பத்தி செழிப்பாக இருந்த காலகட்டம் அது. அரசாங்கம் முயற்சித்தால் பால் மா ஊழலைக் கண்டறிந்து தடை செய்து, இலங்கையில் பால் உற்பத்தி வளத்தை மீண்டும் அதிகரிக்கச் செய்யலாம்.
ஆனால், நாட்டைச் சூழவும் கடல் இருக்கும்போது, பேணியில் அடைக்கப்பட்ட மீன்களை இறக்குமதி செய்யும் நாட்டில், காய்கறிகளும், வெங்காயமும் உள்நாட்டில் விளைந்து கொள்வனவு செய்ய ஆளில்லாது குப்பையிலெறியப்படும்போது, அவற்றையே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நாட்டில் அரசாங்கம் பால் உற்பத்தியை மீண்டும் நல்ல நிலைமைக்குக் கொண்டு வருமா என்பது சந்தேகத்துக்குரியது.
எவ்வாறாயினும், தற்காலத்தில் அமைச்சர்களுக்கும், மக்கள் தலைவர்களுக்கும் பருகுவதற்காக பாராளுமன்றத்துக்குள் பால் மாவில் தயாரிக்கப்பட்ட பானங்கள் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு தூய பசுப்பால் மாத்திரமே அங்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு, இலங்கைப் பாராளுமன்றமே ஏற்றுக் கொள்ளாத பால் மா எனும் பதார்த்தத்தை, அரசாங்கமானது மக்கள் மீது திணித்து, மக்களைப் பருக நிர்ப்பந்திப்பது ஏனென்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.
எம். ரிஷான் ஷெரீப்