ட்டத்தரணி ஒருவர் நடுவீதியில் பணத்துடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் லோக்சபா தொகுதி மற்றும் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வரும் 18ம் திகதி நடைபெறுகிறது. இதனால் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், பறக்கும் படையினர் தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள ஒரு பள்ளி அருகே நின்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தினர். அந்தக் காரில் சட்டத்தரணி பாலசுப்பிரமணியன் என்பவர் இருந்தார். அவர், “நான், நகையை அடமானம் வைத்த பணத்தை வங்கியில் வாங்கிய கடனுக்காக செலுத்தப் போகிறேன். அதற்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
அப்போது, பறக்கும் படையினருக்கும் சட்டத்தரணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சட்டத்தரணி பாலசுப்பிரமணியன், தான் செலுத்தி வந்த காரை நடுவீதியில் நிறுத்தி விட்டு, பணத்துடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், ‘தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அத்துமீறி சோதனையில் ஈடுபடுகின்றனர்’ எனக் கூறி கோஷங்கள் எழுப்பினார்.
தகவல் அறிந்து அங்குவந்த பொலிஸார், அவரைச் சமாதானம் செய்தனர். இதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவத்தால், அந்தப் பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பும் நிலவியது.