தமிழ்நாடே நடுங்கும் வகையில் பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள பாலியல் கொடுமையில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை காப்பாற்றிட ஆளுங்கட்சியே போராடுவது கடும் கண்டனத்திற்குரியது என முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. பிரமுகர் நாகராஜ் என்பவரை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், பொள்ளாச்சியில் வசித்து வரும் திருநாவுக்கரசு என்பவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் முகநூலில் அறிமுகம் ஏற்பட்டது.
கனிவோடு பழகிய திருநாவுக்கரசு மீது நன்மதிப்பு ஏற்பட்டதால், அந்த பெண் அவரோடு நெருங்கிப் பழகத் தொடங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து தனது நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைப்பதாக கூறிய திருநாவுக்கரசு, அந்த பெண்ணை காரில் அழைத்துச் சென்றதாக தெரிகிறது.
ஊஞ்சபேலம்பட்டி என்ற இடத்தில் காரில் ஏறிக் கொண்ட நண்பர்கள், அந்த பெண்ணை தங்களின் செல்போனில் ஆபாசமாக படம்பிடித்து அதைவைத்து அப்பெண்ணிடம் இருந்த நகையை மிரட்டி வாங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த முறைப்பாட்டில் அடிப்படியில் விசாரணை நடத்திய பொலிஸார், சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த செல்போனில் 40 க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை பறிமுதல் செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு தலைமறைவானார்.
இதனிடையே பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக திருநாவுக்கரசு மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இதையடுத்து இரண்டு தனிப்படை அமைத்து போலீசார் திருநாவுக்கரசை தேடி வந்தனர்.
அப்போது தலைமறைவான திருநாவுக்கரசு திருப்பதி பகுதியில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பின்தொடர்ந்த பொலிஸார் தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசுவை பொள்ளாச்சியை அடுத்த மாகினாம்பட்டி பகுதியில் கைது செய்தனர்.
இந்நிலையில் தன்னை நம்பி வந்த ஒரு இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுப்பது போலவான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நம்பிக்கை துரோகத்தின் உச்சகட்டத்தில் கதறி அழும் அந்த பெண்ணின் குரல் காண்போரை பதைபதைக்க வைக்கிறது. உன்னை ஃப்ரெண்டுனு நம்பித்தான வந்தேன் என்று அந்தப்பெண் கதறுவதும், அதனை பொருட்படுத்தாத கொடூரன், மறைமுகமாக வீடியோ எடுக்கச்சொல்வதும், அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இத்தனை பெரிய கொடூரம் தமிழகத்தில் நடந்திருப்பது தமிழகத்துக்கே பெரிய கரும்புள்ளியாக உள்ளது.