உதயநகர் பகுதியில் காப்புறுதி நிறுவனப் பணியாளர் ஒருவரை வெட்டிக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
குறித்த வழக்கை விசாரித்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் மா.கணேசராஜா, சந்தேகநபரை நாளை வரை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.
கிளிநொச்சி உதயநகர் கிழக்குப் பகுதியில் வைத்து கூட்டுறவுக் காப்புறுதி நிறுவனத்தின் கிளிநொச்சிக் கிளை முகாமையாளரான காந்தலிங்கம் பிறேம ரமணன் (வயது 32) கடந்த 5 ஆம் திகதி வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.
உதயநகர் கிழக்கில் தங்கியிருக்கும் இடத்திலிருந்து புறப்படும்போதே உந்துருளியில் வந்த ஒருவர் சரமாரியாக வெட்டியுள்ளார். தலை, கை, கால் மற்றும் உடம்பில் வெட்டுக்காயங்களுக்குள்ளான அவர் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்ல முன்னர் உயிரிழந்தார்.
கொலையுண்டவரை, அவரது உறவினர் ஒருவரே வெட்டியதாகவும் வெட்டியவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் என்றும் தெரியவந்தது. இதனையடுத்து மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.