வெனிசுவேலா நெருக்கடி குறித்து ரஷ்யாவுடனும், சீனாவுடனும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்திருந்தார்.
ஆனால், இதுவரை அவ்வாறான பேச்சுவார்த்தைக்கான கோரிக்கை விடுக்கப்படவில்லை என ரஷ்யா இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
இராணுவ துருப்புகள் மற்றும் இராணுவ ஆயுதங்களை வெனிசுவேலாவிற்கு அனுப்பி ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை எச்சரித்திருந்தது.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ரஷ்ய, சீன ஜனாதிபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ட்ரம்ப் அறிவித்தார்.
மதுரோவின் 2018ஆம் ஆண்டு தேர்தல் சட்டவிரோதமானது எனத் தெரிவித்து போராடிவரும் எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் கய்டோ கடந்த ஜனவரி மாதம் தன்னை இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்தார்.
இவரது அறிவிப்பை வரவேற்ற அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்குலக நாடுகள் கய்டோவிற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.