11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாகவே கரன்னகொட மற்றும் ஏனையவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை வசந்த கரன்னகொட தன்னை கைது செய்ய நடவடிக்கைகளுக்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு நாளை (வியாழக்கிழமை) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2008-2009 காலப்பகுதியில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக அட்மிரல் கரன்னகொடவிடம், வாக்குமூலம் ஒன்றைப் பெற்று கொள்வதற்காக பொலிஸார் கடந்த மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அவரது வீட்டிற்குச் சென்றிந்தனர்.
எனினும் குறித்த பொல்ஹென்கொட முகவரியில் அவரது சகோதரர் வசித்து வரும் நிலையில், கரன்னகொடவின் சகோதரர் வேறொரு முகவரியினை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.
இந்நிலையில், கரன்னகொடவின் சகோதரர் வழங்கிய பத்தேகனவில் உள்ள கரன்னகொடவின் வீட்டுக்கு கிருலப்பனைப் பொலிஸார் சென்றபோதும் அவர் அந்த முகவரியில், இல்லையென கிருலப்பனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர் இவர் நாட்டை விட்டுத் தப்பிச்செல்லக் கூடும் என்பதால், கடவுச்சீட்டை முடக்கவும், அவரை கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.