சற்றுமுன் பிரித்தானியா பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இவ்வாக்கெடுப்பில் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 286 உறுப்பினர்களும் எதிராக 344 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இதையடுத்து 58 வாக்குகள் வித்தியாசத்தில் தெரேசா மே-யின் ஒப்பந்தம் மூன்றாவது தடவையாக பிரித்தானியப் பாராளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த தோல்வியின் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தால் பிரெக்ஸிற்றுக்காக வழங்கப்பட்டிருந்த மே மாதம் 22 ஆம் திகதிக்கான காலக்கெடுவை பிரித்தானியா இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 12 ஆம் திகதிக்குள் பிரெக்ஸிற்றின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானமொன்றை எடுக்கும் நிலைக்கு பிரித்தானியா தற்போது தள்ளப்பட்டுள்ளது.
உடன்பாடற்ற பிரெக்ஸிற் அல்லது நீண்டகால பிரெக்ஸிற் தாமதம் ஆகிய இரண்டில் ஒன்றை தெரிவு செய்யவேண்டிய கட்டாயத்தில் பிரித்தானிய அரசாங்கம் உள்ளது.
நீண்டகால பிரெக்ஸிற் தாமதத்தை பிரித்தானியா தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் மே மாதம் இடம்பெறவுள்ள ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் பங்கெடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றைய 27 நாடுகளும் ஒப்புதல் அளித்தால் மாத்திரமே நீண்டகால பிரெக்ஸிற் தாமத்துக்கான பிரித்தானியாவின் கோரிக்கை சாத்தியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.