சவுதிக்கான பிரித்தானியாவின் ஆயுத விற்பனை பேரழிவுகரமான மனிதாபிமான நெருக்கடிக்கு பங்களித்ததாக சுட்டிக்காட்டியே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தொழிற்கட்சி, ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சி, லிபரல் டெமக்ராட்ஸ், ப்ளைட் சைம்ரு மற்றும் பசுமைக் கட்சியின் தலைவர்கள் இணைந்து இக்கடிதத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட்-க்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
இங்கிலாந்தின் அரசாங்கம் அதன் கொள்கையை மாற்றாதது மட்டுமின்றி சவுதிக்கான ஆயுத விற்பனைக்கான தடையை நீக்குமாறு மற்றைய நாடுகளிடம் கோரிக்கை விடுத்தும் ஒழுக்கரீதியாக கண்டிக்கத்தக்கது.
சவுதி அரேபியாவில் அடிப்படை மனித உரிமைகள் சட்டங்கள் பின்பற்றப்படுவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இங்கிலாந்து அரசாங்கம் தமது கைவசமுள்ள அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தவில்லை என்பது வெட்கக்கேடாகும்.
ஜேர்மனி, ஸ்பெயின், டென்மார்க், கனடா, அமெரிக்க காங்கிரஸ், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றம் ஆகியவை இந்த அடிப்படையில் சவுதிக்கான ஆயுத விற்பனையை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளன.
யெமன் போரை பொறுத்தவரையில் சவுதி அரேபியா பொறுப்பற்ற முறையிலும் காட்டுமிராண்டித்தனமாகவும் நடந்துகொள்கிறது. யெமன் போரில் சவுதியின் பங்களிப்பு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி முடிக்கும்வரை ஆயுத விற்பனை நிறுத்திவைக்கப்பட வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.