அ.தி.மு.க. கூட்டணியில், தே.மு.தி.க.வை எப்படியாவது தங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. உறுதியாக இருந்தது.
இதனைக்கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.க., பா.ம.க. ஆகியனவும் தமது இணக்கத்தினைத் தெரிவித்திருந்ததால், அமைச்சர்கள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வந்தனர்.
4 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்குவதாக அ.தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது. ஆனால், தே.மு.தி.க. தரப்பில் 5 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவைத் தொகுதி மற்றும் 21 சட்டப்பேரவைத் தொகுதி மற்றும் இடைத்தேர்தலில் குறிப்பிட்ட அளவு இடங்கள் கோரப்பட்டதையடுத்து இழுபறிநிலை ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து இரு கட்சிகளுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இன்று இணைந்தது.
தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அ.தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், உடன் பிரேமலதா மற்றும் சுதிஷ் ஆகியோர் இருந்தமை குறிப்பிடத்தக்கது.