தீவிரவாதி மசூத் அசார் பாகிஸ்தானில் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகின்றது. அதேநேரம் உளவுத்துறையின் தகவல்படி சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானில் உள்ள இராணுவ மருத்துவமனை ஒன்றில் மசூத் அசார் இரகசியமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மசூத் அசார் உயிருடன் இருப்பதாக அவரது குடும்பத்துக்கு நெருக்கமானோர் தெரிவித்ததாக பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தற்போது தகவல் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவனான மசூத் அசார் எங்கு இருக்கின்றார் என்பது பற்றி தங்களிடம் எந்த தகவலும் இல்லை என பாகிஸ்தான் அரசு முன்னர் தெரிவித்திருந்தது.
அத்தோடு, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் நோய்வாய்ப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரைஷி சமீபத்தில் தெரிவித்தார். இந்த நிலையில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் உயிருடன் இருப்பதாக தற்போது தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
