ஆண்டவருக்கு அஞ்சுவோரே அவரிடம் இரக்கத்திற்காக காத்திருங்கள். நெறி பிறழாதீர்கள்! பிறந்தால் வீழ்ச்சி அடைவீர்கள். ஆண்டவருக்கு அஞ்சுவோரே அவரிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுக்குக் கைமாறு கிடைக்காமற் போகாது.’
ஆண்டவரிடம் கொள்ளும் நம்பிக்கை எந்த அளவுக்கு உறுதியானதாய் இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்த நம்பிக்கை நமக்கு வரம் அருளுகின்றது.
மூன்றாம் நிலை
இயேசு முதல் முறை நிலத்தில் வீழ்கிறார் .. ..
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
“எளியோர் படும் துன்பத்தின் பொருட்டும், ஏழைகள் விடும் பெருமூச்சின் பொருட்டும் இதோ நான் எழுகிறேன் | பாதுகாப்பு வேண்டுபவனுக்கு அதை நான் அளிப்பேன்.” என்றார் ஆண்டவர்
- (சங் . 11: 3)
பலவீனங்களே வீழ்ச்சிக்கு வழிகோலுகின்றன. ஆன்மாவில் வலுவிருந்தும் உடலில் நலிவிருந்ததால் இயேசு இங்கே வீழ்ந்து கிடக்கின்றார்.
மரமொன்றின் வளர்ச்சியோடு வைரம் அங்கே சேராவிட்டால், காற்றை எதிர்த்து நிற்க முடியுமா? உடல் பலத்தோடு ஆன்மீக பலமும், உளப்; பலமும் தேவை.
வாழ்க்கை அனுபவங்கள் வெறும் சம்பவங்களாகவே போய் விட்டால், பெய்த மழைக்கு அடித்துவரும் இன்னுமொரு காட்டாற்று வெள்ளந்தான். அது தங்கி நிற்க வேண்டும்; குளமாக வேண்டும், வளம் சேர்க்க வேண்டும். அனுபவம் தருகின்ற உறுதிதான் விழுந்தாலும் மீண்டும் எழுந்து வர தைரியத்தைக் கொடுக்கிறது.
பாதைகளில் பள்ளமும் படுகுழியுமென்றால் பயணம் சீராக அமைவதுண்டா? உள்ளத்தில் கரடுமுரடென்றால் வாழ்க்கைப் பயணம் நேராய் அமைந்திடுமா? தடுக்கி விழுதல் - பாவத்தில் இடறி விழுதல் - அங்கே புதுமையன்று.
சிந்திப்போம்:
உடல் சோர்ந்து வாடினாலும், உள்ளம் வாடாது உறுதியோடு வாழ எனக்கு வரம் தந்த இயேசுவே உமக்கு நன்றி!
உள்ளம் நலிவுற்று, வாழ்வில் துன்புற்றாலும் உம்மிலே நம்பிக்கை வைத்து வாழ வரம் தந்த இறiவா உமக்கு நன்றி!
போகின்ற எனது வாழ்க்கைப் பயணத்திலே, நான் தவறிலே தடுக்கி விழுந்தாலும் மீண்டும் அதினின்றும் விடுபட்டு என் வாழ்வைச் செவ்வனே தொடர அருள் ஈந்த இறைவா உமக்கு நன்றி!
என் உள்ளம் கலங்கித் தடுமாறும்போதெல்லாம் என் அருகில் நின்று என்னைத் தேற்றிப் பலம் தந்த இறiவா உமக்கு நன்றி!
எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவன – ஆமென்!
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்