
“ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால் சோதனைகளை எதிர் கொள்ள முன் ஏற்பாடுகளைச் செய்து கொள். உள்ளத்தில் உண்மையானவானாய் இரு| உறுதியாக இரு. துன்ப வேளையில் பதற்றத்துடன் செயலாற்றாதே. “
இன்று முதல் தபசு காலம் முடியும் வரை நாளும் ஒரு சிலுவைப்பாதை சிந்தனையை செய்வோம். இந்தக் காலத்தைத் தக்க முறையில் எம்மை மாற்றியமைக்கப் பயன்படுத்திக் கொள்ளுவோம்.
சிலுவைப் பாதை பாடுகளின் பாதை மட்டுமல்ல
நம் வாழ்வின் பாதையுங் கூட.
மனிதனாக நான் வாழ
சிலுவைப் பாதை
என்னைச் சிந்திக்கச் செய்கிறது.
அந்தச் சிந்தனை ஒரு தியானமாகி
எனக்குள் ஒரு முறை
நானே உற்று நோக்கி
தெரிகின்ற குறைகளை, நிறைகளை
சீர்தூக்கிப் பார்த்து
ஒரு முழுமையான மனிதனாக என்னை மாற்ற
சிலுவைப்பாதைச் சம்பவங்கள்
என்னைத் தூண்டுகின்றன.
இரண்டாயிரம் ஆண்டின் முன்னே
நடந்து முடிந்துவிட்ட
வெறும் சம்பவமல்ல இது.
நம் அன்றாட வாழ்வில் எதிரொலிக்கும்
நிகழ்வுகள் இவை.
துன்பப்பட்டவன் வாழ்வு இது.
துன்பப்படுபவன் வாழ்வுக்கு வழியும் இது.
எனவே,
சிலுவையின் பாதையில் நாம் நடப்போம்
சிந்திக்கும் பாதையில் நாம் நடப்போம்
புறக் கண்களை மட்டுமல்ல
அகக் கண்களையும் கூட திறந்து நடப்போம்.
முதலாம் நிலை
இயேசு சாவுக்குத் தீர்வையிடப்படுகிறார்
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
“தீயோனின் அறிவுரைப்படி நடவாதவன், பாவிகளின் வழியில் செல்லாதவன், பழிகாரர் கூட்டத்தில் அமராதவன் பேறுபெற்றவன்”
“நீதித் தீர்ப்பு வரும்போது தீயோர் நிலை குலைந்து போவர்; நல்லவர் சபையில் பாவிகள் நிலைத்திரார்.”
(சங். 1 : 1 மற்றும் 4)
வஞ்சகம் அறிவுக்குத் திரைபோட, வெஞ்சினம் கண்களை மறைக்க சதிகாரர் ஆடுகின்ற ஆட்டம்.
உதிக்கும் சூரியனில் கரிக்கும், கறைக்கும் இடமிருப்பதாக நயவஞ்சகரின் கொக்கரிப்பு.
சேற்றின் நடுவே இருந்தாலும் தாமரையில் ஏது சேறு? பாவிகள் நடுவே வாழ்ந்தாலும் இயேசுவில் பாவக்கறை இருக்க முடியுமா?
பரபாசுக்கும், பரமனுக்கும் வித்தியாசம் புரியாத அறிவிலிகள் நடுவே பதவிக்காக நீதியைக் கைகழுவி விடும் பிலாத்துக்கள்.
வாழவைக்க வந்த தெய்வம் வாழாவெட்டியாகப் போனதிங்கே.
தன் கண்ணில் குத்தி நிற்கும் நாட்டுக் கட்டையைக் கண்டு கொள்ளாமல், கண்டு கொள்ள மனமில்லாமல், அயலவன் கண்ணில் தூசைக் காட்டும் அவல ஜீவன்கள் நடுவே ஒரு உத்தமர் இங்கே மௌனியாக!
நீதி ஸ்தலத்திலே சத்தியம் வாயடைத்துப் போயிற்று உண்மை ஊமையாயிற்று!! மனதில் மட்டும் நீதி எப்படி வரும்?
சிந்திப்போம்:
பிறர் செய்த செயல்களைப் பெரிதுபடுத்தாமல் விடுவதற்கு எனக்கு மனம் தந்தீரே, இறiவா உமக்கு நன்றி!
பிறரைத் தீர்ப்பிட்டு அவரது மாண்பைச் சிதைக்கின்ற மனிதனாக நான் வாழாமல் இருக்க வழிகாட்டிய இறiவா உமக்கு என் நன்றி!
தேவையான இடத்தில் வாய் திறந்து நீதிக்காக்குரல் கொடுக்கத் துணிவை எனக்குத் தந்தமைக்காகவும் இறiவா எனது நன்றி!
எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி-
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!
