புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இடம்பெற்ற பா.ஜ.க.வின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா, குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கொள்கை ரீதியான முக்கிய முடிவெடுக்கக் கூடிய பா.ஜ.க.வினது நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடந்தது. இதில், வரும் மக்களவைத் தேர்தலில் வேட்பாளராகக் களம் இறக்கப்படுவோர் 75 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
ஆனால், தற்போது அந்த வயதுடைய சிலர் மக்களவை, மாநிலங்களவையில் உறுப்பினர்களாக உள்ளனர். எதிர்வரும் தேர்தலில் 75 வயதடைந்தவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், 75 வயதைத் தாண்டியுள்ள மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பி.சி.கந்தூரி, கால்ராஜ் மிஸ்ரா ஆகியோருக்கு இடம் கிடைப்பது கடினம்.
ஆனால், அவர்களுக்கு ராஜ்யசபா உறுப்பினர் போன்ற பதவிகள் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.