இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 42 சதவீத வாக்குகளைப் பெறுவதோடு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 30.4 சதவீத வாக்குகளைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 1ஆம் திகதியில் இருந்து 543 தொகுதிகளில் உள்ள 70 ஆயிரம் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு இந்த முடிவுகள் நேற்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டன.
மேலும், இந்த தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது குறித்தும், வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவை குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவது அதிகமான பலனைத் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழகம் மற்றும் கேரளாவில் பா.ஜ.க. கூட்டணி மிகவும் பலவீனமடைந்துள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க – பா.ஜ.க. கூட்டணி 35.8 சதவீத வாக்குகளைப் பெற்று 8 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது. மீதமுள்ள 31 இடங்களில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி 44.4 சதவீத வாக்குகளுடன் 31 இடங்களைக் கைப்பற்ற முடியும்.
அதேபோல் கேரள மாநிலத்தில் பா.ஜ.க. 19.6 சதவீத வாக்குகள் பெற்றாலும், அங்குள்ள 20 தொகுதிகளில் ஒரு தொகுதியைக் கூட பா.ஜ.க.வால் வெல்ல முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு 46 சதவீத வாக்குகளும் 17 இடங்களும் கிடைக்கக்கூடும், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயகக் கூட்டணிக்கு 3 இடங்கள் கிடைக்கலாம்.
சிவோட்டர்ஸ் மற்றும் ஐ.ஏ.என்.எஸ். நடத்திய முதல் கருத்துக் கணிப்பில் தேர்தலுக்கு முந்தைய பா.ஜ.க. கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காமல் 261 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரியவந்தது. இப்போது 2 ஆவது கட்ட கருத்துக்கணிப்பில் பா.ஜ.க. தனித்து 264 இடங்களையும், கூட்டணியுடன் சேர்ந்து, 305 இடங்களைப் பெறும்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 141 இடங்களிலும், மற்ற கட்சிகள் 97 இடங்களிலும் வெல்லக்கூடும்.
ஒருவேளை தேர்தலுக்கு பின்னர் பா.ஜ.க. கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான வை.எஸ்.ஆர். காங்கிரஸ் (10இடங்கள்), டி.ஆர்.எஸ். கட்சி(16), பிஜு ஜனதா தளம்(10), மிசோ தேசிய முன்னணி ஒரு இடம், ஆகிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க வாய்ப்பு உண்டு. இந்த கட்சிகள் மூலம் 36 இடங்கள் கிடைக்க வாய்ப்புண்டு.
தேர்தலுக்கு முன் பா.ஜ.க மிகவும் சாதுரியமாக மகாராஷ்டிராவில் சிவசேனா, அசாமில் போடோலாந்து மக்கள் முன்னணி, பஞ்சாபில் சிரோன்மணி அகாலிதளம், தமிழகத்தில் அ.தி.மு.க, உத்தர பிரதேசத்தில் அப்னாதளம் ஆகியவற்றுடன் ஏற்பட்ட கூட்டணி மூலம் பா.ஜ.க.வுக்கு கூடுதலாக 47 இடங்கள் கிடைக்கவுள்ளது.
என்று குறித்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.