வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் சேவையில் இல்லாமையைக் கண்டித்து குறித்த போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நான்கு அம்சக் கோரிக்கையை முன் வைத்து வைத்தியசாலை முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டமே இன்று தற்காலிகமாக நிறைவுக்கு வந்துள்ளதாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நிரந்தர வைத்தியர்களை நியமிக்குமாறு கோரி யாழில் உண்ணாவிரத போராட்டம்!
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர்களை நியமிக்குமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம், இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
வைத்தியசாலை முன்றலில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் இன்றும் (திங்கட்கிழமை) தொடர்கின்றது.
குறித்த வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் தொடர்ச்சியாக 24 மணிநேரமும் சேவையில் ஈடுபட வேண்டுமென தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் வேறு வைத்தியசாலையில் பணியாற்றிவிட்டு சம்பளத்தைப் பெற்றுக்கொள்வதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அவர்கள் தமது வைத்தியசாலையில் 24 மணித்தியாலங்களும் சேவையாற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழர் விடுதலை கூட்டணியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் வே.பிரசாந்தன், குறித்த வைத்தியசாலையில் 24 மணி நேரமும் சேவை வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக சுகாதார திணைக்களம் உத்தரவாதம் தரும்பட்சத்தில் தாம் போராட்டத்தை கைவிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.