பிள்ளைகளை விட தந்தையரை ஆண்டவர் அதிகம் மேன்மைப்படுத்தியுள்ளார். பிள்ளைகள் மீது அன்னையருக்குள்ள உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளார்.
தந்தையரை மதிப்போர் தம் பாவங்களுக்கு கழுவாய் தேடிக்கொள்ளுகின்றனர்.”
தந்தையாம் இறைவனை ஒவ்வொரு கட்டத்திலும் மேன்மைப்படுத்தியவராய் நாம் இயேசுவைக் காண்கின்றோம். தம் மரண முடிவைத் தெரிந்திருந்தும். அதன் கொடுமையை அனுபவித்திருந்தும் தமது விருப்பத்தை முன்னிறுத்தாமல் ‘உமது சித்தப்படியே எனக்காகட்டும்’ எனறுற தன்னையே தன் தந்தையின் சித்தத்திற்கு உட்படுத்திக் கொள்வதை நாம் காண்கின்றோம். கூடுமானவரை இந்தத் தவக்காலத்திலாவது என் மட்டில் இறைவன் கொண்டுள்ள சித்தம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.
ஏழாம் நிலை
இயேசு இரண்டாம் முறை தரையில் வீழ்கிறார்; .. ..
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
“வறியவரைத் தரையினின்றும் தூக்கி விடுகிறார்; ஏழையைக் குப்பை மேட்டினின்றும் கைதூக்கி விடுகிறார்.
“தலைவர்களிடையே, தம் மக்களை ஆளும் தலைவர்களிடையே அமர்த்துமாறு அவனைக் கைதூக்கி விடுகிறார்.”
(சங். 112:7-8)
கங்கை நீர் சேற்றிலே கலக்கின்றபோதுதான் அது சேற்று நீராக மாறுகின்றது. அது மலை உச்சியில் நின்றும் புறப்பட்டுப் பாய்கின்றபோது பனிபோன்ற தூய்மையுடன்தான் இருக்கிறது.
நீர் பள்ளம் நோக்கித்தான் பாயும். மனிதனும் தவறுவதென்பது ஒன்றும் இயற்கைக்குப் புறம்பானதல்ல.
புரிந்த தவறை விட்டுவிலகி மீண்டும் அந்தச் சேற்றிலே விழாமல் இருக்கின்ற மனிதனே புனிதனாகின்றான்.
தன்னைவிட்டுத் தன் குறைகளை அகற்றி விட முயலும் மனிதனுக்குத்தான் இறைவனும் கை கொடுத்துத் தூக்கி விடுகின்றார்.
தென்றல் காற்றிலும் நாணல் வளைகின்றது| புயல் காற்றிலும் நாணல் வளைகின்றது. ஆனாலும் அது மீண்டும் நிமிருகின்றது.
வளையும் அந்த நாணலின் இயல்பு எம்மிலும் வரவேண்டும் - வளைவதிலல்ல, நிமிருவதில்!
சிந்திப்போம்:
பூவோடு சேர்ந்த நாராக என்னோடு பிறர் சேர்ந்து நல்மனம் பெறும்படியாக என்னை நற்பண்புகளால் உருவாக்கிவிட்ட இயேசுவே உமக்கு நன்றி!
பற்பல ஆசைகளும் மனதை வளைத்து வாட்டினாலும், அவற்றை வெற்றி கொண்டு நிமிருகின்ற மன உறுதியைத் தந்த இறiவா நன்றி!
தவறு செய்தவர் தம்மை ஒதுக்கித் தள்ளிவிடாது மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குகின்ற தாராள மனதை எனக்குத் தந்த இறiவா உமக்கு நன்றி!
“குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.” என்று மன்னித்து வாழும் அருளை எனக்குத் தந்தமைக்காக இறiவா உமக்கு நன்றி!
எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்