லோ மீட்டர் தூரத்தை, 10 மணி 30 நிமிடத்தில் நீந்திக் கடந்து தேனி மாணவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
அதிக நீரோட்டம் உள்ள பாக்கு நீரிணைக் கடலில், மார்ச் முதல் மே மாதம் வரை நீரோட்டம் மற்றும் அலையின் வேகம் குறைவாக இருக்கும். இந்த காலகட்டங்களில் நீச்சல் வீரர்கள், தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை (சுமார் 30 கி.மீ.) நீந்தி சாதனை படைப்பது வழக்கம். பலர் இவ்வாறு நீந்தி கடந்திருந்தாலும், 10 வயதுடைய ஒருவர், 10 மணி 30 நிமிடத்தில் நீந்தி கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தின் தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்த ரவிக்குமார்- தாரணி தம்பதியின் மகன் ஜெய் ஜஸ்வந்த் (10). இவர், தேனியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். நீச்சலில் பல சாதனைகள் படைத்துள்ள இவர், இலங்கை தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி வரையுள்ள 28.5 கிலோ மீட்டர் தூரத்தை, 10 மணி 30 நிமிடத்தில் நீந்திக் கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதற்காக, ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடந்த 27ம் திகதி மாலை மாணவர் ஜெய் ஜஸ்வந்த், அவருடைய தந்தை ரவிக்குமார், பயிற்சியாளர் விஜய்குமார், ஒருங்கிணைப்பாளர் ரோஜர் உட்பட 14 பேர் கொண்ட குழுவினர் ஒரு விசைப்படகு மூலம் இலங்கை தலைமன்னாருக்கு சென்றனர். பின்னர், தலைமன்னாரின் ஊர்மலை என்ற பகுதியில் இருந்து சரியாக நேற்று (28ம் திகதி) அதிகாலை 4 மணிக்கு ஜெய் ஜஸ்வந்த் கடலில் குதித்து நீந்தத் தொடங்கினார்.
அவருக்கு, இந்திய மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு படையினர் கப்பலில் ரோந்து சுற்றி பாதுகாப்பு அளித்தனர். காலை 9.45 மணிக்கு இந்திய கடல் எல்லையைக் கடந்த அவர், அங்கிருந்து தொடர்ந்து நீந்தியபடியே பகல் 2.30 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையை வந்தடைந்தார். அவரை, கடலோர காவல் துறை ஏ.டி.எஸ்.பி. இளங்கோ மற்றும் கடற்படை அதிகாரிகள், மத்திய – மாநில புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.
முந்தைய நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் சாதனையை (16 மணி நேரம்) முறியடித்து, 28.5 கி.மீ. துாரத்தை 10 மணி 30 நிமிடத்தில் நீந்திக் கடந்து புதிய சாதனை படைத்த மாணவர் ஜெய் ஜஸ்வந்துக்கு, ரயில்வே பொலிஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில்சென்று வாழ்த்து கூறினார். மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை சார்பில் மாணவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
மாணவர் ஜெய் ஜஸ்வந்த் கூறியதாவது; “தலைமன்னார் பகுதியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு நீந்தத் தொடங்கினேன். குற்றாலீசுவரன் சாதனையை முறியடித்து, 10 மணி 30 நிமிடத்தில் தனுஷ்கோடி வந்தடைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் மற்றும் பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் 3 ஆண்டுகளுக்கு பிறகு, தனுஷ்கோடி கடல் பகுதியில் இருந்து நீந்தி தலைமன்னார் சென்று விட்டு, மீண்டும் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்திவர திட்டமிட்டுள்ளேன்” என தெரிவித்தார்.
ஜெய் ஜஸ்வந்த் நிகழ்த்திய சாதனை குறித்து பயிற்சியாளர் விஜய்குமார் கூறுகையில், ”கடந்த 1994ம் ஆண்டு, குற்றாலீஸ்வரன் என்பவர் இதே தலைமன்னார் – தனுஷ்கோடி இடையேயான தூரத்தை 16 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை புரிந்தார். அப்போது அவருக்கு 12 வயது. அதற்கு பின்னர், பலர் இவ்வாறு நீந்தி கடந்திருந்தாலும், மிகவும் குறைந்த வயதுடைய ஒருவர், 10 மணி 30 நிமிடத்தில் கடந்திருப்பது உலக சாதனையாகும்” என்று தெரிவித்தார்.