(பாண்டி)
கிழக்கு கல்வி மேம்பாட்டிற்கான கனடா அமைப்பினால் கல்குடா கல்வி வலயத்திலுள்ள மாங்கேணி றோமன் கத்தோலிக்க பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலருக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.நவரெட்ணராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய கல்வியல் கல்லூரி விரிவுரையாளரும், இலங்கைக்கான கனடா இணைப்பாளருமான ஆ.சிறிதரன், கோட்டைக் கல்விப் பணிப்பாளர் க.ஜெயவதனன் மற்றும் அழகுக் கலை நிபுணர் ம.சியானி ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
வாகரை பிரதேசத்தின் கிருமிச்சை, கொக்குவில் போன்ற தூர இடங்களில் இருந்து மேற்குறித்த பாடசாலைக்கு கால் நடையாக கல்வி கற்க வரும் மாணவர்களின் நலன் கருதியே இவ் உதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், மேலும் வறுமை நிலையில் இருந்து கொண்டு கற்றலில் நாட்டம் செலுத்தும் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் நலன் கருதி மேலும் பல உதவிகளை வழங்கவுள்ளதாக விரிவுரையாளர் ஆ.சிறிதரன் தெரிவித்தார்.