LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 23, 2019

“மட்டக்களப்பு”-- "அம்பாறை"

நான் மட்டுமல்ல, பெரும்பாலான அம்பாறை மாவட்டத்தவர்கள், மட்டு – அம்பாறை மாவட்டங்களுக்கு வெளியே, பெரும்பாலும் தம்மை “மட்டக்களப்பார்” என்றே இனங்காட்டிக்கொள்வார்கள். ஒரே மாகாணமே என்றபோதும், ஓரளவு நிலத்தொடர்பு, திருமணத்தொடர்பு காணும் போதும், திருகோணமலைத் தமிழர் போல், ஏன் அம்பாறைத் தமிழர், தம்மைத் தனித்துவமாகக் காட்டிக்கொள்வதில்லை என்ற கேள்வி பொதுவாக எழுப்பப்படுவதுண்டு. அந்தக் கேள்விக்கு விடை, ஒரு கதை! இன்றைய தலைமுறை மறந்துவரும் – மறைந்துவரும் மிகப்பெரீய்ய்ய வரலாறு அது!

“மட்டக்களப்பு” என்பது கிழக்கிலங்கையின் மத்தியிலுள்ள மாபெரும் களப்பின் – வாவியின் பெயர். அதைச்சூழ்ந்து ஏற்பட்ட குடியிருப்புகளால் உருவான தேசம், ஈழத்தின் பிறபகுதிகளில் “மட்டக்களப்பு” என்றே அறியப்பட்டது. மண்ணாறு (இன்றைய அருவியாறு/மல்வத்து ஓயா) ஓடிய ஊரின் பெயரும் “மண்ணாறு” (>>மன்னார்) ஆனது போல், “கந்த”வில் (மலை) அமைந்த நாட்டின் பெயரும், “கந்த (உடரட்ட)” என்றானது போல். (>>கண்டி, கண்டி என்ற தமிழ்ச்சொல்லுக்கு, மலைக்கணவாய், மலைப்பாதையோரக் கடை என்ற பொருள்களும் உண்டு.)

மட்டக்களப்பு என்பது, பொதுவாக திருக்கோணேச்சரத்துக்கும் கதிர்காமத்துக்கும் இடைப்பட்ட தேசமாகவும், குறிப்பாக வெருகலாற்றுக்கும் குமுக்கனாற்றுக்கும் இடைப்பட்ட பிரதேசமாகவும், இன்னும் குறிப்பாக,  சங்கமன்கண்டிக்கும் நட்டூர் ஆற்றுக்கும் (வாழைச்சேனை) இடைப்பட்ட நாடாகவும் அறியப்பட்டது.

வந்தாறுமூலை, வாகரை, படுவான்கரை, உகந்தைப் பகுதிகளில் கிடைத்துவரும் தொல்லியல் ஆதாரங்கள், இங்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக  மக்கள் குடியிருப்பதற்கு சான்று சொல்லும்.

உரோகண நாட்டுச் சிங்கள அரசர் ஆட்சியில், அதன் அரசிருக்கை “தீகவாவி”யாகவும், சோழர் படையெடுப்புக்குப் பின்னரான வன்னியராட்சியில், பழுகாமம், பாணமை, சம்மாந்துறை, ஏறாவூர் ஆகிய நான்கு வன்னிமைப்பிரிவுகளைக் கொண்டதாகவும், பண்டைய மட்டக்களப்பின் ஆட்சி மையங்கள் காணப்பட்டன.

கி.பி 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஒல்லாந்தர் முதன்முதலாக இலங்கையில் கால்பதித்தது இங்கு தான் என்பதற்கும், கண்டி மன்னனைத் தம்வசப்படுத்த, “தர்மசிங்கத்துரை” எனும் மட்டக்களப்பு மன்னனுடன் (உண்மையில் மன்னன் அல்லன், ஒரு வன்னியன் அல்லது திசாவை – சிற்றரசன் என்பதே பொருத்தம்) உறவேற்படுத்திக் கொண்டதற்குமான சான்றுகள் ஒல்லாந்தர் கடிதங்களில் உண்டு. “மட்டிக்கலோ நகர்” என்று அவர்கள் தம் குறிப்புகளில் சொல்லும் ஊர், இன்றைய சம்மாந்துறை – வீரமுனைப் பகுதியே தான்.

போர்த்துக்கேயருக்கும் ஒல்லாந்தருக்கும் ஆதிக்கப்போட்டி ஏற்பட்ட 1620களில், ஒல்லாந்தர் பக்கம் சாய்ந்திருந்த மட்டக்களப்பு வன்னியரும் மக்களும் போர்த்துக்கேயரால் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டனர். அந்நாட்டின் முதற்பெரும் தேசத்துக்கோயிலான திருக்கோவிலும் தென்கிழக்கிலங்கையின் பல புகழ்பெற்ற ஆலயங்களும்,  சூறையாடப்பட்டு, இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சோகம் அப்போது தான் நிகழ்ந்தது. பெருமளவு இடம்பெயர்வுகள்,  பழைய குடியிருப்புக்கள் கைவிடப்பட்டதும், புதிய குடியேற்றங்கள் உருவானதும், இந்தத் துயர்மிகுந்த காலப்பகுதியில் தான்.

ஆனாலும், இரகசியமாக மட்டக்களப்பு (சம்மாந்துறை) நகரினூடாக ஒல்லாந்தர் கண்டி மன்னரைத் தொடர்பு கொள்வதை நிறுத்தவில்லை. வாணிபத்தில் போர்த்துக்கேயருக்குப் போட்டியாக உள்ளூர்ச் சோனகரும் தமிழகச் செட்டிமாரும் உருவாகி வந்தனர். இந்த மும்முனைப் போட்டியில் இலங்கைக்கும் வெளியுலகுக்குமான வாணிபத்தை நிரந்தரமாகக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் வேண்டிய நிர்ப்பந்தத்தில், போர்த்துக்கேயர் இருந்தனர்.

எனவே அவர்கள் கிழக்கின் முக்கியமான போக்குவரத்து ஊடகமாகவும் வணிகப்பாதையாகவும் இருந்த மட்டக்களப்பு வாவியைத் தம்வசம் கொணர முடிவெடுத்தனர். அவ்வாவி கடலோடு இணையுமிடத்தில், பாதுகாப்பு மிக்க இயற்கையரணோடு இருந்த புளியந்தீவில் (இன்றைய மட்டு நகர்) அவர்களால் கோட்டை ஒன்று அமைக்கப்பட்டது. எனினும், அக்கோட்டையை 1638 மே 18இல்  அவர்கள் ஒல்லாந்தரிடம் பறிகொடுக்கவேண்டி நேரிட்டது.

அதை ஒல்லாந்தர், தமது கிழக்கிலங்கைத் தலைமையகமாக மாற்றிக்கொண்டனர். சம்மாந்துறை மெல்ல மெல்லத் தன் தலைமை அரசிருக்கை நிலையை இழக்க, புளியந்தீவுக் கோட்டையைச் சார்ந்து தோன்றிய ஐரோப்பியரின் அரச அலுவலகங்களும் குடிமக்களின் இடம்பெயர்வுகளும், அதைப் புதிய மட்டக்களப்பு நகராக விரைவிலேயே வளர்ந்தெழச் செய்தன.

ஒல்லாந்தராட்சியிலும் ஆங்கிலேயராட்சியிலும் வன்னியர் ஆட்சிப்பலம் இழந்து போனார்கள். அவர்களைப் பிரதியீடு செய்த போடியார்  போன்ற பிற்காலப் பதவிகள், “பற்றுக்கள்” எனும் ஆட்சிப்பிரிவுகளுக்கு மட்டுப்படலாயின. கோறளை, ஏறாவூர், மண்முனை, கரவெட்டி, எருவில், போரதீவு, கரைவாகு, அக்கரை, சம்மாந்துறை, நாடுகாடு, பாணமை என்ற 11 பற்றுக்களும், சந்தர்ப்பங்களில் அவற்றின் மேற்கே விந்தனைக்காட்டில் குடியிருந்த வேடர் குடியிருப்புகள் “விந்தனைப்பற்று” என்ற பெயரில் தனிப்பற்றாகவும், என்று பன்னிரண்டு பற்றுக்கள், ஐரோப்பியர் கால மட்டக்களப்பு மாவட்ட ஆட்சியின் கீழ் அமைந்திருந்தன.

சுதந்திரத்தின் பின்!!

தென்கிழக்கிலங்கையின் விவசாய உற்பத்தியை அதிகரிக்க, “கல்லோயாத் திட்டம்”, சுதந்திர இலங்கை அரசால் 1949இல் முன்மொழியப்பட்டது. அத்திட்டம், 1953இல் முடிவடையும் வரை, பெருமளவான வேற்று மாவட்ட மக்களின் குடியேற்றம், தென்மட்டக்களப்பில் ஏற்பட்டது. இங்கு குறிப்பிடவேண்டிய இன்னொரு முக்கிய விடயம், சுதந்திர இலங்கையில் இடம்பெற்ற முதலாவது தமிழ் இனப்படுகொலை என வருணிக்கப்படும் "கல்லோயாப் படுகொலை"  இக்காலகட்டத்தில் தான் (யூன் 11 - 16, 1956) அம்பாறை நகர்ப்பகுதியில் சுமார் நூற்றைம்பது தமிழர் உயிரைக் காவு வாங்கியது.

1959 தேர்தல்தொகுதி மீள்நிர்ணயப் பரிந்துரைகளின் கீழ், பழைய நாடுகாட்டுப் பகுதியில், “அம்பாறைவில்” குளத்தை அண்டி உருவான புதிய குடியேற்றங்கள், 19.03.1960 அன்று, "அம்பாறை" எனும் பெயரில் ஒரு புதிய தேர்தல் மாவட்டமாக மாறின. எனவே, 1960இன் இறுதியில், தென்மட்டக்களப்பில், பொத்துவில்,  கல்முனை, நிந்தவூர் (பின்பு சம்மாந்துறை எனப் பெயர்மாற்றப்பட்டது), அம்பாறை எனும் நான்கு தேர்தல் மாவட்டங்கள் அமைந்திருந்தன.

அடுத்த ஆண்டே, இந்நான்கு தேர்தல் மாவட்டங்களையும் ஒன்றிணைத்து, “அம்பாறை” எனும் புதிய நிர்வாக மாவட்டமொன்றை இலங்கை அரசு பிரகடனம் செய்தது. இதன்மூலம், பாரம்பரியமிக்க தமிழர் தாயகமான மட்டக்களப்புத் தேசம், மட்டக்களப்பு, அம்பாறை எனும் இரு மாவட்டங்களாகத் துண்டாடப்பட்டது. 1978 இலங்கைச் சட்டத் திருத்தத்துக்கு அமைய, இந்த நான்கு ஓரங்கத்தவர் தேர்தல் மாவட்டங்களும் அகற்றப்பட்டு, பல்லங்கத்தவர் தெரிவாகும் "திகாமடுல்ல தேர்தல் மாவட்டம்” உருவாக்கப்பட்டதுடன், பதுளைக்குரிய "தெகியத்த கண்டி" பிரதேசமும் அதனுடன் இணைக்கப்பட்டு, இன்றைய அம்பாறை மாவட்டம் முழுமை பெற்றது.

ஒல்லாந்தரிலிருந்து இலங்கை ஆட்சியாளர் வரை, வேற்றார் பலரின் மண்ணாசைக்காக  தம் சொந்தக் குருதியைத் தியாகம் செய்தோரின் பரம்பரைகள் வாழும் “அம்பாறை மாவட்டம்”  1961ஆம் ஆண்டு இதே தினத்தில் தான் பிறந்தது! (1961 ஏப்ரல் 10) ஆம், அம்பாறை மாவட்டத்துக்கு இன்று வயது ஐம்பத்தைந்து!

தம்மைத் தனியே அம்பாறைத் தமிழராய் நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில், அரசியல் அவர்களைத் தள்ளுகின்ற போதும், அரைநூற்றாண்டுக்கு மேலாக, பாரம்பரியத்தை மறக்காமல் இந்தத் தலைமுறை வரை தம்மை “மட்டக்களப்பார்” என்றே இனங்காட்டிக் கொள்ளும் அம்மாவட்டத்து மக்கள், அந்த அடையாளத்தோடு,  அப்பெயர் சார்ந்ததாக தம் முன்னோர் சிந்திய கண்ணீரையும் குருதியையும் நினைவுகூரட்டும்! 🙏 🙏 🙏

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7