உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த பொதுநல மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கறிஞர் வினீத் தண்டா என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனுவில் தெருவிருக்கப்பட்டிருப்பதாவது, 40 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் மிகப்பெரிய சதி இருப்பதாக கூறப்படுகின்றது. எனவே, இது குறித்து நீதி விசாரணை வேண்டும். தாக்குதலுக்கு 370 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருள் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் முழு விசாரணை நடத்த வேண்டும்.
மேலும், பல்வேறு சோதனைச்சாவடிகளை கடந்து இவ்வளவு வெடிப்பொருளை ஒருவர் தனியாக கொண்டு சென்றிருக்க முடியாது என்றும், இதன் பின்னணியில் பலர் உள்ளனர் என்றும் மிகப்பெரிய இந்த சதித்திட்டத்தின் தூண்டுகோலாக இருந்தவர்கள் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்போது குறித்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்து இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டனர்.
ஆயிரம் கிலோவுக்கு அதிகமான வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட காரை பயன்படுத்தி இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது. இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த தடயவியல் வல்லுனர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சேகரித்த ஆதாரங்களின் அடிப்படையில் சுமார் 370 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிப்பொருளை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, வழக்கறிஞர் வினீத் தன்டா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.