(பாண்டி)
இலங்கையில் போதைப் பொருள் பாவனை தொடர்பாக சர்வதேசம் வரை பேசப்படுவதும் மிகவும் வேதனையாக உள்ளது என வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.வி.எம்.தையூப் தெரிவித்தார்.
வாழைச்சேனை அந்நூர் கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் சாதனையாளர்கள் கௌரவிக்கும் நிகழ்வு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-
பிரதேசங்களில் போதைப் பொருள் பாவனை தொடர்பாக இலங்கையில் மாத்திரம் பேசப்பட்டது. ஆனால் தற்போது இலங்கையில் போதைப் பொருள் பாவனை தொடர்பாக சர்வதேசம் வரை பேசப்படுவதும் மிகவும் வேதனையாக உள்ளது.
எமது நாட்டின் ஜனாதிபதி வெளிநாட்டிற்கு சென்று அங்கு போதையை ஒழிக்க இராணுவம் என்ன நடவடிக்கை எடுக்கின்றது என கண்காணித்து. தற்போது அதனை எமது நாட்டிலும் போதைப் பாவனையை தடை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
அந்த வகையில் இராணுவப்படை, பொலிஸ் படை மற்றும் விசேட அதிரடிப் படையினரையும் கொண்டு பிரதேசங்கள் தோறும் நடவடிக்கை மேற்கொண்டு வரப்படுகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என்றார்.
வாழைச்சேனை அந்நூர் கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி அமைப்பின் தலைவர் எச்.எம்.நியாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு பல்கலைக் கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி, மட்டக்களப்பு ரெலிகொம் முகாமையாளர் பொறியிலாளர் எல்.ஜெகதீசன், ரிதிதென்ன இக்றா வித்தியாலய அதிபர் என்.சகாப்தீன் உட்பட பல பிரதேச பிரமுகர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக் கழகம் சென்ற மாணவர்கள், ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் நினைவுச் சின்னம் என்பன வழங்கி வைக்கப்பட்டது.