இன்று காலை 8.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த வீரர்களை, கௌரவப்படுத்த, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ விமான நிலையத்துக்கு சென்று அவர்களை மாலை அணிவித்து வரவேற்றார்.
இதனையடுத்து, இலங்கை கிரிக்கெட் சபைக்கு வந்தடைந்த வீரர்களுக்கு அங்கும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
வரவேற்புக்கு பின்னர், சரித்திர வெற்றி குறித்து தெளிவுபடுத்துவதற்கான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.
இதில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி டி சில்வா, செயலாளர் மொஹான் டி சில்வா என பலரும் கலந்துக்கொண்டனர்.
இதன்போது, இந்த சரித்த வெற்றிக் குறித்து டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன கருத்து தெரிவித்தார்.
வெற்றி குறித்து அவர் கூறிய கருத்துக்கள் இவை,
“நான் அணித்தலைவர் பதவியை ஏற்ற பிறகு, வீரர்களுடன் கலந்து பேசி இப்போட்டியில் எவ்வாறு எளிதாக வெற்றிபெறலாம் என கலந்தாலோசித்தோம்.
நீண்ட தொடரில் விளையாடுவதற்காக நாங்கள் சென்றிருந்தோம். பல தோல்விகளுக்கு பிறகு இந்த வெற்றியை பெற்றிருக்கின்றோம். ஒவ்வொரு முறையும், எவ்வாறு மீண்டெழுவது என்பது குறித்து தான் அதிகம் யோசித்தோம். ஒன்றிணைந்து செயற்பட்டோம்.
எனது முதலாவது அணித்தலைமையில் இந்த சரித்திரர வெற்றியை பதிவு செய்திருப்பது மகிழ்சியளிக்கின்றது.
ஒசேத பெர்னார்ன்டோ, எம்புல்தெனிய, கசுன் ராஜித மற்றும் விஸ்வ பெர்னான்டோ ஆகிய வீரர்கள் அணிக்காக சிறப்பாக பங்களிப்பு வழங்கினர். அத்தோடு அனைவரும் முழு பங்களிப்பை அளித்தனர்.
குசல் ஜனித் பெரேராவின் துடுப்பாட்டம் அபாரமாக இருந்தது. எனக்கு ஆதரவு தெரிவித்த எல்லோருக்கும் நன்றி’ என கூறினார்.
இதனை தொடர்ந்து, கருத்து தெரிவித்த கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி டி சில்வா, செயலாளர் மொஹான் டி சில்வா,
“இலங்கை அணி இதற்கு முன்னதாக தொடர் தோல்விகளை பதிவுசெய்தமைக்கு அணியின் தெரிவே காரணம். ஆனால் தற்போது இந்த பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுதவிர, உள்ளூர் கிரிக்கெட் தொடர் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அந்த விமர்சனங்கள் எம்புல்தெனிய மற்றும் ஒதேச பெர்னான்டோவின் மூலம் துடைக்கப்பட்டுள்ளது.
ஆம், இலங்கையில் உள்ளூர் கிரிக்கெட் தொடர் சிறப்பானதாக அமைந்திருக்கின்றது என்பது தற்போது தெளிவாக புலப்பட்டுள்ளது” என கூறினர்.
தென்னாபிரிக்கா அணியுடன் அடுத்ததாக ஒருநாள் தொடர் இருப்பதால், இன்று கௌஷல் சில்வா, மொஹமட் சிராஸ், மிலிந்த சிறிவர்தன, லசித் எம்புல்தெனிய, திமுத் கருணாரத்ன, லஹிரு திரிமன்னே மற்றும் சுரங்க லக்மால் ஆகிய வீரர்களே வந்தடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமில்லாத இளம் வீரர்களை உள்ளடக்கிய திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி, தென்னாபிரிக்காவை அதன் மண்ணில் துவம்சம் செய்து டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
இவ்வாறு தென்னாபிரிக்காவை வயிட் வோஷ் செய்ததன் மூலம், தென்னாபிரிக்க மண்ணில் ஆசிய அணியொன்று பெற்றுக்கொண்ட முதல் வெற்றியாக இந்த வெற்றி முத்திரை பதிக்கப்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆசிய அணிகளால் சாதிக்க முடியாததை, தற்போது இலங்கை அணி சாதித்து காட்டியது மட்டுமல்லாமல், இலங்கை அணியின் சில வீரர்கள் சாதனை புத்தகத்தில் தன் பெயர்களையும் முத்திரை பதித்துள்ளனர்.
இந்த வெற்றியை இந்த உலகமே புருவம் உயர்த்தி வியப்புடன் நோக்கி வருகின்ற நிலையில், இந்த வெற்றியை தேடி தந்த சுப்பர் ஹீரோக்களுக்கு சமூகவலைதளங்களின் ஊடாகவும் தற்போது இரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த கால தோல்விகளால் துவண்டு போயிருந்த இலங்கை அணிக்கும், இரசிகர்களுக்கும் இந்த வெற்றி புத்துயிர் அளித்துள்ளது.
மேலும், இந்த வெற்றியின் மூலம், இரசிகர்களின் மனதில் இலங்கை அணி, இனிவரும் காலங்களில் சாதிக்கும் என்ற நம்பிக்கை துளிர்விட்டுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் இந்த வெற்றி பயணம் தொடர வேண்டுமென, நாமும் ஆதவன் ஊடாக மனதார வாழ்த்துகின்றோம்.